Published : 18 Jul 2023 02:41 PM
Last Updated : 18 Jul 2023 02:41 PM
சென்னை: ரெய்டு போன்ற மிரட்டல் உருட்டல்களுக்கு திமுக எந்நாளும் பணியாது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை, பாரிமுனை, அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ள ஆடி மாத அம்மன் திருக்கோயில் ஆன்மிகச் சுற்றுலாவினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (18.07.2023) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஆடி மாத அம்மன் திருக்கோயில்களுக்கு குறைந்த கட்டணத்தில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் ஆன்மீக சுற்றுலா செல்ல விரும்புவர்களுக்கு ஏதுவாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் இன்றைக்கு அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயிலிலிருந்து 10 அம்மன் திருக்கோயில்களுக்கு புறப்பட்ட ஆன்மிகச் சுற்றுலாவில் 47 பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு சிறப்பு தரிசனம் செய்யப்பட்டு, திருக்கோயில் பிரசாதங்கள் மற்றும் மதிய உணவும் வழங்கப்படுகிறது. சென்னையில் 2 பயணத்திட்டங்களாக ரூ.1,000/- மற்றும் ரூ.800/- ஆகிய கட்டணங்களில் இச்சுற்றுலா செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் ஒரேநாளில் பல்வேறு அம்மன் திருக்கோயில்களுக்கு சென்று பக்தர்கள் இறை தரிசனம் செய்ய முடியும்.
ஆளவந்தார் அறக்கட்டளையின் சொத்துக்களை பொறுத்தளவில் இதுவரை எந்த ஒரு தனியாருக்கும் தரப்படவில்லை. ஆளவந்தாரின் உயிலில் குறிப்பிட்டுள்ளபடி அருள்மிகு தலசயன பெருமாள் திருக்கோயில் மற்றும் திருவிடந்தை, அருள்மிகு நித்திய கல்யாண பெருமாள் திருக்கோயிலுக்கு தேவையான அனைத்து நித்தியப் பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன. அத்திருக்கோயில்களில் திருப்பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஆளவந்தாரின் சொத்துக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை எடுத்து வருவதோடு, அவற்றை பாதுகாக்கும் வகையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கின்ற பணியும் நடைபெற்று வருகிறது. ஆளவந்தாரின் நோக்கங்களுக்கு எதிராக எந்த விதமான நடவடிக்கையும் இதுவரையில் அரசு எடுக்கவில்லை என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இதுவரை 866 திருக்கோயில்களில் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன. ரூ.4764 கோடி மதிப்பிலான 5,080 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. திருக்கோயில்களுக்குச் சொந்தமான இதுவரை 1.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் ரோவர் கருவியின் வாயிலாக அளவீடு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. ஆகவே, திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் இறை சொத்து இறைவனுக்கே என்ற வகையில் அந்த சொத்துக்களை பாதுகாப்பது, அவை எந்த நோக்கத்திற்காக திருக்கோயில்களுக்கு எழுதி வைக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுகின்ற பணியில் இந்து சமய அறநிலையத்துறை தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றது" என தெரிவித்தார்.
அமலாக்கத்துறை சோதனை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், "பொன்முடி மீதான அமலாக்கத்துறை சோதனையை பொறுத்தவரை முதல்வர், நேற்று கூறிய அதே கருத்தைத் தான் நானும் கூறுகிறேன். ஏற்கனவே ஆளுநர் திமுக அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். அதேபோல் அமலாக்கத் துறையும், அந்த பிரச்சார அணியிலே இணைந்து இருக்கின்றது. சட்டப்படி அதை எதிர்கொள்ளுகின்ற வல்லமை பொன்முடிக்கு உண்டு. இது போன்ற ரெய்டுகளுக்கும், மிரட்டல் உருட்டல்களுக்கும் திராவிட முன்னேற்ற கழகம் எந்நாளும் பணியாது. தொடர்ந்து முன்பை விட வேகமாக தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளில் திராவிட முன்னேற்றக் கழகம் இயங்கும். இது போன்ற பிரச்சனைகளில் இருந்து எங்களை காப்பதற்கு கழக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கின்றார்" என குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT