Published : 18 Jul 2023 02:07 PM
Last Updated : 18 Jul 2023 02:07 PM
புதுச்சேரி: பா.ஜ.க-வின் அச்சுறுத்தலால் தி.மு.க.வுக்கு பின்னடைவு இல்லை என திருச்சி சிவா எம்.பி. கூறியுள்ளார்.
புதுச்சேரி வில்லியனூர் தொகுதி திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் வில்லியனூர் மேலண்ட வீதியில் நேற்று இரவு நடந்தது. இக்கூட்டத்துக்கு பிறகு திருச்சி சிவா எம்.பி, செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடந்த சில காலமாகவே அதிகார மையங்களை வைத்து பா.ஜ.க அச்சுறுத்தும் போக்கு நடைபெற்று வருகிறது. தற்போது தமிழகத்தில் ஆரம்பித்திருக்கிறது. தமிழகத்தில் நடைபெற்று வரும் சோதனையின் காரணமாக எந்த வகையிலும் தி.மு.க.வுக்கு பின்னடைவு கிடையாது.
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பணி எளிதாகும். அதன் மூலம் தி.மு.க. வெற்றி நிச்சயமாக கிடைக்கும். மக்கள் அனைத்தையும் உணர்ந்துள்ளனர். மத்திய அரசு சோதனை செய்வதற்கான நோக்கங்களையும், காரணங்களையும் தெரிவிக்கவில்லை. இது குறித்து நாங்கள் எந்த வகையிலும் அச்சமடையவில்லை" என்று குறிப்பிட்டார்.
முன்னதாக, புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசுகையில், "பா.ஜ.க பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து இந்த மாநிலத்திற்கு ஆட்சிக்கு வந்தனர். அதில் குறிப்பாக மாநில அந்தஸ்து. அது குறித்து இதுவரை ஒரு படி கூட முன்னேறியது இல்லை. இன்றளவும் பொய் கூறி வருகின்றனர். சட்டப்பேரவையில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு அரசு தீர்மானமாக ஏற்றுக்கொண்டனர். ஆனால் இதுவரை அந்த தீர்மானத்தை அனுப்பவில்லை. ஆளுநர் பதில் கூறுவதில்லை.
தமிழிசை ஆளுநர் என்பதில் இருந்து மாறி அரசியல்வாதியாக மாறிவிட்டார். புதுச்சேரியில் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 100 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக கூறுகிறேன். ஊழல் நடக்கவில்லை என கூறுங்கள் நாங்கள் ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களை தருகிறோம். மக்களுக்கு ஒவ்வாத திட்டங்களை புதுச்சேரியில் செய்கின்றனர்" என்று குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் திமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவா, புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சிவா ஆகியோர் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்புரை ஆற்றினர். இந்தக் கூட்டத்தில், அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில் குமார், சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT