Published : 18 Jul 2023 12:44 PM
Last Updated : 18 Jul 2023 12:44 PM
சென்னை: குரும்பர்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க மத்திய அரசுக்கு புதிய வடிவில் பரிந்துரை செய்வது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழகத்தில் சமூக நீதியைக் காப்பதற்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு கடந்த பல ஆண்டுகளாக பயன் கிடைக்காத நிலையில், அதற்கான தமிழக அரசின் பரிந்துரைகளில் சில திருத்தங்களைச் செய்யக் கோரி முதல்வராகிய தாங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன்.
தமிழகத்தில் வாழும் குரும்பர், குரும்பர்கள், குரும்பன், குரும்பா, குருமன் ஆகிய சாதிப்பிரிவினர் அனைவரும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் தான். அவர்களின் வாழ்க்கை முறை, சமூகநிலை ஆகியவை ஒரே மாதிரியாகத் தான் உள்ளனர். ஆனால், நீலகிரி மாவட்டத்தில் வாழும் குரும்பாக்களும், தமிழகத்தின் பிற பகுதிகளில் வாழும் குருமன்களும் மட்டுமே பழங்குடியினர் பட்டியலில் முறையே வரிசை எண்கள் 17, 18-இல் சேர்க்கப்பட்டுள்ளனர். குரும்பர், குரும்பக் கவுண்டர் ஆகிய சாதியினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வரிசை எண் 18-இல் சேர்க்கப்பட்டுள்ளனர். இது அநீதியானது.
ஒரே மாதிரியான வாழ்க்கை முறையும், சமூக நிலையும் கொண்ட அனைத்து வகை குரும்பர்களையும் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. தமிழக அரசும் இது தொடர்பாக 1978, 2006, 2014 ஆகிய ஆண்டுகளில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அவை அனைத்தையும் மத்திய அரசு தள்ளுபடி செய்து விட்டது. கடைசியாக 27.04.2020ம் நாள் இதுதொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை அளித்திருந்தது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் இது தொடர்பாக கடந்த 2022ம் ஆகஸ்ட் மாதம் 3-ஆம் நாள் நான் எழுப்பிய வினாவுக்கு விடையளித்த மத்திய பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் விஷ்வேஸ்வர் டூடு அளித்த விடையில் தமிழக அரசின் பரிந்துரை மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் தலைமைப் பதிவாளருக்கு அனுப்பப்படிருப்பதாக தெரிவித்தார்.
ஆனால், தமிழக அரசின் இந்த பரிந்துரையும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையரால் ரத்து செய்யப்பட்டு விட்டதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து குரும்பர்களை பழங்குடியினத்தில் சேர்க்கக் கோரி புதிய பரிந்துரையை தமிழக அரசு இம்மாதத்தில் அனுப்ப தீர்மானித்து அதற்கான பணிகள் நடைபெறுவதாக அறிகிறேன்.
பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் அனைத்து குரும்பர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி, இது தொடர்பாக மத்திய பழங்குடி அமைச்சக அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுகளின்படியும் தமிழக அரசுக்கு சில ஆலோசனைகளை வழங்க விரும்புகிறது. குரும்பர்களை பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதற்காக பரிந்துரைகள் கீழ்க்கண்டவாறு அமைய வேண்டும் என்பது தான் அந்த ஆலோசனை.
பழங்குடியினர் பட்டியலில் வரிசை எண் 17-இல் குரும்பாக்கள் ( நீலகிரி மாவட்டம்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் நீலகிரி மாவட்டம் என்பதை மட்டும் நீக்க வேண்டும். அவ்வாறு செய்தால் குரும்பாக்கள் அனைவரும் பழங்குடியினர் பிரிவில் சேர்க்கப்பட்டு விடுவார்கள்.
பழங்குடியினர் பட்டியலில் வரிசை எண் 17-இல் ஏற்கனவே இடம் பெற்றுள்ள குரும்பாக்கள் என்ற சாதியுடன், அப்பெயருக்கு இணையான, ஒரே பொருள் கொண்ட குரும்பாக்கள், குரும்பன், குரும்பர் ஆகிய சாதி பெயர்களையும் சேர்க்க வேண்டும்.
பழங்குடியினர் பட்டியலில் வரிசை எண் 18-இல் ஏற்கனவே இடம்பெற்றுள்ள குருமன்கள் என்ற சாதியுடன், அப்பெயருக்கு இணையான, ஒரே பொருள் கொண்ட குருமன் என்ற சாதி பெயரை சேர்க்க வேண்டும்.
தமிழக அரசின் பரிந்துரை மேற்கண்ட வடிவத்தில், வலிமையான காரணங்களுடன் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டால், அதை மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் இந்திய தலைமை பதிவாளர் அலுவலகம், தேசிய பழங்குடியினர் ஆணையம் ஆகியவை அப்படியே ஏற்றுக்கொள்ளும் எனத் தெரிகிறது. அதனால் அனைத்து குரும்பர்களும் பழங்குடியினத்தில் சேர்க்கப்படுவர். எனவே, தமிழக அரசு விரைவில் அனுப்பவிருக்கும் பரிந்துரையை மேற்கண்ட வடிவத்தில் அமைக்க வேண்டும்; அதன்மூலம் அனைத்து குரும்பர்களும் பழங்குடியினத்தில் சேருவதை உறுதி செய்ய வேண்டும் என்று கோருகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT