Published : 18 Jul 2023 01:48 PM
Last Updated : 18 Jul 2023 01:48 PM
தஞ்சாவூர்: தஞ்சாவூரின் மையப் பகுதியில் ஓடும் புது ஆறு எனப்படும் கல்லணைக் கால்வாயின் அழகை கண்டு ரசிக்க, நீர்வளத் துறையால் பல கோடி ரூபாய் செலவில் ஆற்றின் இருபுறமும் கட்டப்பட்ட நடைபாதை பாலம், பராமரிப்பின்றி உடைந்து, அந்தரத்தில் தொங்குவது வேதனையளிக்கிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
கல்லணையில் இருந்து பிரிந்து செல்லும் ஆறுகளில் புது ஆறு எனப்படும் கல்லணைக் கால்வாய் தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே தரை மட்டத்திலிருந்து 30 அடி ஆழத்திலும், போகப் போக வெட்டிக்காடு பகுதியில் 20 அடி உயரத்திலும் தண்ணீர் செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
தஞ்சாவூரின் மையப் பகுதியில் செல்லும் இந்த ஆற்றின் அழகை பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நீர்வளத் துறை சார்பில் பெரிய கோயில் முதல் இர்வின் பாலம் வரை ஆற்றின் இருபுறமும் கான்கிரீட் தூண்கள் கொண்டு நடைபாதையும், இரும்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டன. இதற்கு கரிகாலச்சோழன் நடைபாதை என பெயர் சூட்டப்பட்டது.
அதேபோல, இர்வின் பாலம் முதல் சுற்றுலா மாளிகை வரை ஆற்றின் இருபுறமும் நடை பாதை, அதில் பல வண்ண விளக்குகள், ஓய்வாக அமர இருக்கைகள் அமைக்கப்பட்டு, ராஜராஜசோழன் நடைபாதை என பெயர் சூட்டப்பட்டது. இந்த நடை பாதைகள் ஆரம்பத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டன. மக்கள் காலை, மாலை நேரங்களில் இதை பயன்படுத்தினர்.
பின்னர், ஆற்றில் தண்ணீர் இல்லாத காலத்தில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு நுழைவுவாயில் கதவு பூட்டப்பட்டது. இதனால், இந்த நடை பாதையில் ஆங்காங்கே சமூக விரோதிகள் அத்துமீறி நுழைந்து சென்று மது அருந்துவது உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்திக் கொண்டனர். இதன் காரணமாக, பொதுமக்கள் இந்த நடை பாதைகள் உள்ள பகுதிக்கு செல்ல அச்சப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு இர்வின் பாலம் அகலமாக புனரமைக்கப்பட்டபோது நடைபாதைகள் சேதமடைந்தன. பாலம் கட்டி முடித்து விட்டாலும், ராஜராஜசோழன் நடைபாதையும், கரிகாலச்சோழன் நடைபாதையும் சீரமைக்கப்படாமல், ஆங்காங்கே உடைந்து அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
தஞ்சாவூருக்கு சுற்றுலா வரும் பொதுமக்கள் கல்லணைக் கால்வாயின் அழகை கண்டு ரசிக்க பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த நடைபாதைகள் போதிய பராமரிப்பு இல்லாமல் ஆங்காங்கே உடைந்து அந்தரத்தில் தொங்குவதை பார்க்கும்போது வேதனை அளிக்கிறது என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் துரை.மதிவாணன் கூறுகையில், “கல்லணைக் கால்வாய் ஆற்றின் அழகை கண்டு ரசிக்க ஆற்றின் கரைகளில் இருபுறமும் பாதுகாப்பு அம்சங்களுடன் நடைபாதை அமைக்கப்பட்டது.
ஆரம்பத்தில் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை நீர்வளத் துறையினர் முறையாக பராமரிக்கவும், கண்காணிக்கவும் தவறியதால், நாளடைவில் அது சமூக விரோதிகள் மது அருந்தும் கூடாரமாக மாறிவிட்டது. அங்கு பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட இரும்பு கம்பிகளும் திருடப்பட்டுள்ளன.
மேலும், இர்வின் பால புனரமைப்பு பணியின் போது நடைபாதை சேதப்படுத்தப்பட்டது. அதை மீண்டும் கட்டாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால், நடைபாதை தற்போது அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதை மாவட்ட நிர்வாகம் களஆய்வு செய்து நடைபாதையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT