Published : 18 Jul 2023 01:15 PM
Last Updated : 18 Jul 2023 01:15 PM
நாமக்கல்: அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அருகே விதிமீறி நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள மல்லூரில் டாஸ்மாக கடை செயல்பட்டு வருகிறது. மேலும், அங்குள்ள திறந்த வெளி மது பாரால் பொதுமக்கள் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியில் மல்லூர் உள்ளது. இங்கு நாமக்கல் மாவட்ட எல்லையில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மது பார் இல்லை. இதனால், மதுபானம் வாங்குவோர் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதியில் திறந்த வெளியில் அமர்ந்து மதுபானம் அருந்துகின்றனர்.
மது அருந்துவோருக்கு வசதியாக அப்பகுதியில் தள்ளுவண்டி மற்றும் சிறிய கடைகளில் தண்ணீர் பாட்டில் மற்றும் இறைச்சிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இப்பகுதியின் அருகே நாமக்கல் மாவட்ட காவல் துறையினரின் சோதனைச் சாவடி உள்ளது. என்றாலும், திறந்த வெளியில் எந்த அச்சமுமின்றி எப்போது மது அருந்துவோர் கூட்டம், கூட்டமாக அமர்ந்து மது குடிப்பது அதிகரித்து வருகிறது.
காவல்துறை சோதனைச் சாவடியில் நாள் முழுவதும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் போலீஸார் இருந்தாலும், திறந்தவெளியில் மது அருந்துவோரைக் கண்டு கொள்வதில்லை. அதுபோல, இப்பகுதியில் அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
திறந்தவெளி பாரால் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் மற்றும் இச்சாலையைக் கடந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பெண்கள் என அனைவரும் அச்சத்துடன் செல்லும் நிலை நீடிக்கிறது. சில நேரங்களில் மது அருந்தி விட்டு சிலர் தகராறில் ஈடுபடுவதால், பல நேரங்கள் இப்பகுதி கூச்சலும், பரபரப்புமாக மாறிவிடும்.
இது தொடர்பாக புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெண்களின் நலன் கருதி திறந்த வெளியில் மது அருந்துவோரைக் கட்டுப்படுத்த வேண்டும். தொடர்ந்து அப்பகுதியில் போலீஸார் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT