Published : 18 Jul 2023 06:30 AM
Last Updated : 18 Jul 2023 06:30 AM
சென்னை: அடுத்த சில வாரங்களில் வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்: வன்னியர் சங்கம் வரும் 20-ம் தேதி 44-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி, பாட்டாளி சொந்தங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நமக்கானஇடஒதுக்கீடு சாதாரணமாக கிடைத்துவிடவில்லை. தொடர் மறியல் போராட்டம், போலீஸ் துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதலில் 21 பாட்டாளிகள் உயிரிழந்தது, அதற்குபிறகும் பலர் உயிர் தியாகம் செய்தது ஆகியவற்றுக்கு பிறகே, வன்னியர்கள் உள்ளிட்ட 108 சமூகங்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டை கடந்த 1989-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
வன்னியர்களுக்கு மட்டும் வழங்கப்பட வேண்டிய 20 சதவீத இடஒதுக்கீடு 108 சாதிகளுக்கு இணைத்து வழங்கப்பட்டதால், நமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்கவில்லை. அதை சுட்டிக்காட்டியதன் பயனாக, பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க சட்டம் நிறைவேற்றப்பட்டது. சமூகநீதிக்கு எதிரான சக்திகள் தொடர்ந்த வழக்குகளால் அந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டாலும், தரவுகளை திரட்டி வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2022 மார்ச் 31-ம் தேதி தீர்ப்பளித்தது. ஆனால் இன்னும் புதிய இடஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றப்படவில்லை.
தமிழக அரசுக்கு இதுதொடர்பாக பலமுறை அழுத்தம் கொடுத்தோம். அதன் பயனாக, கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியர்களின் நிலை குறித்த புள்ளிவிவரங்களை மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு வாங்கி பகுப்பாய்வு செய்து வருகிறது. அடுத்த சில வாரங்களில் வன்னியர்கள் இடஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டுவிடும் என்று நம்புகிறேன்.
வன்னியர்களும், சமூகநீதி தேவைப்படும் பிற சமுதாயங்களும் இணைந்து நின்று தேர்தலை சந்தித்தால் மிகவும் எளிதாக அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க முடியும். இந்த உண்மையை நாம் உணரும்போதுதான் நமக்கு உண்மையான விடுதலை கிடைக்கும். அந்த வகையில், அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பாமகவின் முயற்சிக்கு நாம் அனைவரும் படிக்கட்டுகளாக இருந்து உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT