Published : 18 Jul 2023 06:39 AM
Last Updated : 18 Jul 2023 06:39 AM
சென்னை: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி முறையாக கிடைப்பது இல்லை என்று கர்ப்பிணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழக அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இருந்து கர்ப்பிணிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,000 வரவு வைக்கப்படும். 4-வது மாதத்துக்கு பிறகு, இரண்டாவது தவணையாக ரூ.2,000 வழங்கப்படும்.
மேலும், ரூ.2,000 மதிப்புள்ள பெட்டகம் 2 முறை கொடுக்கப்படும். அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்த பிறகு, 3-வது தவணையாக ரூ.4,000, பேறு காலம் முடிந்து குழந்தைக்கு தடுப்பூசி போடும் காலத்தில் 4-வது தவணையாக ரூ.4,000, குழந்தைக்கு 9-வது மாதம் முடிந்தவுடன் ஐந்தாவது தவணையாக ரூ.2,000 என மொத்தம் ரூ.14,000 ரொக்கம், ரூ.4,000மதிப்புள்ள பெட்டகம் வழங்கப்படு கிறது.
ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக இந்த நிதியுதவி யாருக்கும் கிடைப்பது இல்லை. காரணம் கேட்டால், பதிவு செய்த பெயரும், ஆதாரில் உள்ள பெயரும் பொருந்தவில்லை என்பது உள்ளிட்ட காரணங்களை அதிகாரிகள் கூறுகின்றனர் என்று கர்ப்பிணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “பெயர் உள்ளிட்ட விவரங்கள் மாறுபட்டால், நிதியுதவி கிடைக்காமல் இருக்கலாம். அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். மற்றபடி, தகுதியானவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT