Published : 18 Jul 2023 07:06 AM
Last Updated : 18 Jul 2023 07:06 AM
திருச்சி: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், தமிழகத்தில் ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் வழங்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதற்கான வழிகாட்டு நெறிமுறை அண்மையில் வெளியிடப்பட்டது.
இந்தத் திட்டத்தின்கீழ் அந்தந்த ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் சிறப்பு முகாமில் பங்கேற்பதற்கான டோக்கன் மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியவற்றை வீடுதோறும் சென்று வழங்கும் பணி ஜூலை 20 முதல் நடைபெறும் என கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.
ஆனால், பொங்கல் பரிசுத்தொகை போன்று இத்திட்டத்துக்கு வீடுதோறும் சென்று டோக்கன் வழங்குவது எளிதான காரியம் அல்ல என ரேஷன் கடை பணியாளர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பா.தினேஷ்குமார், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி வழங்க வேண்டும். தற்போது சிறப்பு முகாமுக்காக ரேஷன் கடைகளில் இருந்த பயோமெட்ரிக் இயந்திரத்தை எடுத்துச் சென்றுவிட்டனர். இதனால், ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரருக்கும் என்னென்ன பொருட்களை வழங்கினோம் என்பதை எழுதி, அவர்களிடம் கையொப்பம் பெற்றுதான் பொருட்களை வழங்கி வருகிறோம்.
இந்நிலையில், வீடுதோறும் சென்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான டோக்கன், விண்ணப்பப் படிவம் வழங்கும் பணியையும் ரேஷன் கடை பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது எளிதானது அல்ல. இதில், எந்தவொரு அரசியல் கட்சியினரோ, பிறரோ ஈடுபடக்கூடாது என அரசு உறுதிபட தெரிவித்துள்ளது. டோக்கன், விண்ணப்பப் படிவம் வழங்க தெருக்களுக்குச் செல்லும்போது, எங்களிடம் அரசியல் கட்சியினர் தேவையில்லாத வாக்குவாதத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது.
மேலும், குடும்பத்தில் உள்ளவர்கள் வீடுகளை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றுவிடும்பட்சத்தில், அவர்களின் டோக்கனை வேறு யாரிடமும் கொடுக்க முடியாது. பிறகு, மீண்டும் அந்த வீடுகளுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
சில இடங்களில் அதிகபட்சமாக ஒரு கடையில் 1,500 ரேஷன் அட்டைகள் உள்ளன. இங்கு எப்படி ஒரே பணியாளர் அனைத்து வீடுகளுக்கும் சென்று வழங்க முடியும். இதனால் கடையில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கும் பணியும் பாதிக்கப்படும். எனவே, ரேஷன் கடைகளிலேயே கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான டோக்கன் மற்றும் விண்ணப்பப் படிவத்தை வழங்குவதுதான் சரியான நடைமுறையாக இருக்கும்.
ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுக்கு உகந்த நேரத்தில் வந்து கடைகளில் இவற்றை பெற்றுக்கொள்வார்கள். அவ்வாறு வராதவர்களுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்து, வந்து பெற்றுக்கொள்ள செய்யலாம்.
நாள்தோறும் ரேஷன் அட்டைதாரர்களின் வீடுகளுக்குச் செல்வதுடன், எத்தனை பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரிகளுக்கு அறிக்கையும் அளிக்க வேண்டும். இதனால், பணியாளர்களுக்கு கூடுதல் பணிசுமைதான் ஏற்படும். மேலும், இதற்கு எந்த ஊக்கத் தொகையும் வழங்கப்படுவதில்லை.
வீடுகளுக்குச் சென்று டோக்கன், விண்ணப்பப் படிவம் வழங்குவது என்பது ரேஷன் கடை பணியாளர்களுக்கு மட்டுமின்றி, சில நேரங்களில் அரசுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும்.
எனவே, வீடுகளுக்குச் சென்று கலைஞர் உரிமைத் தொகைக்கான டோக்கன், விண்ணப்பப் படிவம் வழங்கும் முறையை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து, கடைகளிலேயே வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT