Published : 17 Nov 2017 11:46 PM
Last Updated : 17 Nov 2017 11:46 PM

போயஸ் இல்லத்தில் வருமானவரி சோதனை எடப்பாடி அரசின் துரோகம்: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது எடப்பாடி துரோக அரசின் செயல் என அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை நடத்தியது. இதில் சில மின்னணு கருவிகளும், லேப்டாப் உள்ளிட்ட கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.

அதில், " தங்களின் ஆட்சியை, பதவியை காப்பாற்றிக்கொள்ள கழகத்தை அடகு வைத்த எடப்பாடியும் பன்னீரும் இன்னும் எத்தனை துரோகங்களை செய்யக் காத்திருக்கிறார்கள்..?

போயஸ் கார்டனில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதற்கு காரணம் எதுவாக இருந்தாலும், இது அம்மாவின் ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகம். இந்த துரோகத்தின் பின்னணியில் எடப்பாடியும் பன்னீர்செல்வமும்தான் இருக்கிறார்கள்.

அ.தி.மு.க.வின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் அவர்கள் இருவரும் பதில் சொல்லியே ஆக வேண்டும். தொண்டர்களையும் மக்களையும் தொடர்ந்து ஏமாற்றி வரும் எடப்பாடியின் துரோக அரசு, இந்த துரோக செயலுக்கு என்ன பதில் சொல்ல போகிறது?" என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

முன்னதாக சில நாட்களுக்கு முன்பு போலி நிறுவனங்கள் தொடங்கி, வரி ஏய்ப்பு செய்ததாக சசிகலா, டி.டி.வி தினகரனின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x