Published : 18 Jul 2023 07:12 AM
Last Updated : 18 Jul 2023 07:12 AM

ஆடி அமாவாசையையொட்டி ராமேசுவரம், காவிரி கரைகளில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடல்

முன்னோர்களுக்கு திதி கொடுத்து, தர்ப்பணம் செய்ய பவானி கூடுதுறையில் திரண்ட பொதுமக்கள்.

ராமேசுவரம் / திருச்சி /ஈரோடு: ஆடி அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடல், ரங்கம் அம்மா மண்டபம், பவானி கூடுதுறை உள்ளிட்ட இடங்களில் நேற்று ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.

மாதந்தோறும் அமாவாசை தினங்களில் தர்ப்பணம் செய்யத் தவறியவர்கள் ஆடி மாத அமாவாசை தினத்தன்று செய்தால், அது ஆண்டு முழுவதும் செலுத்தியதற்கு சமமானது என்று நம்பப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி மாதத்தில் ஆடி 1(நேற்று), ஆடி 31 என 2 அமாவாசைகள் வருகின்றன. எனவே, இரண்டாவதாக வரும் அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதுதான் சிறந்தது என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

இருந்தபோதிலும் ஆடி மாத முதல் அமாவாசையையொட்டி ராமேசுவரத்தில், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

நேற்று அதிகாலை 4 மணியளவில் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை, கால பூஜைகள் நடைபெற்றன. காலை 9 மணியளவில் பர்வதவர்த்தினி அம்பாள் எழுந்தருளல் நிகழ்வு நடைபெற்றது.

காலை 10.30 மணியளவில் அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஸ்ரீராமர், சீதா, லட்சுமணன், அனுமார் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கி அருள்பாலித்தனர். பின்னர் ராமநாதபுரம் சமஸ்தானம் மண்டகப்படியில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். அக்னி தீர்த்தக் கடற்கரையிலும், கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடினர். பின்னர், ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மனை தரிசித்தனர்.

பக்தர்களின் வசதிக்காக ராமேசுவரத்தில் சிறப்பு நகரப் பேருந்துகளும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

இதேபோன்று, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரிக் கரையில் ஏராளமானோர் நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர்.

பவானி கூடுதுறையில் 10 ஆயிரத்த்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து, காவிரியில் நீராடி வழிபட்டனர். இங்கு, ஆடி அமாவாசை நாளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு, ஆடி அமாவாசை 2 நாட்களில் வருவதாலும், வாரத்தொடக்க நாள் என்பதாலும், நேற்று பவானி கூடுதுறையில் கூட்டம் குறைவாக இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x