Published : 07 Nov 2017 11:30 AM
Last Updated : 07 Nov 2017 11:30 AM
‘தி
இந்து’ - ‘சரிகமா’ நிறுவனம் இணைந்து எம்.எஸ்.சுப்புலட்சுமி 2017 விருதுக்கான, சிறந்த இளம் கர்னாடக இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் போட்டிகளை 6-வது ஆண்டாக சென்னை, மியூசிக் அகாடமியில் நேற்று முன்தினம் நடத்தியது. சங்கீத கலாநிதி சுதா ரகுநாதன், மூத்த கர்னாடக இசைக் கலைஞர் எஸ்.ராஜேஸ்வரி, டாக்டர் கே.கிருஷ்ணகுமார் ஆகியோர் இப்போட்டிக் கான நடுவர்களாக இருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் டாக்டர் கே.கிருஷ்ணகுமார் பேசும்போது, ‘‘இந்தப் போட்டிக்கு 80 போட்டியாளர்கள் பாடிய பாடலை ஒலிப்பதிவு செய்து குறுந்தகடு வடிவில் கொடுத்தனர். அதில் இருந்து 20 பேரை தேர்ந்தெடுத்து நேரடியாக வயலின், மிருதங்கத்தோடு பாடுவதைக் கேட்டு, அதில் இருந்து 5 பேரை தேர்ந்தெடுத்தோம்" என்றார்.
இறுதிப் போட்டிக்கு மிருதுளா அஸ்வின், ரகுவீர் ரங்கன், ஸ்ருதி சங்கர் குமார், முரளி சங்கீத், பத்மஸ்ரீ சீனிவாசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் விஸ்தாரமான ராக ஆலாபனையுடன் கூடிய சாகித்யங்களையும், கீர்த்தனைகளையும் பாடி அரங்கில் இருப்பவர்களை மெய் மறக்க வைத்தனர். இளம் கலைஞர்களின் பாடல் தேர்வும் நேர நிர்வாகமும் திட்டமிடலும் ஒருங்கே வெளிப்பட்டன. போட்டி என்பதைக் கடந்து, ஒரே மேடையில் ஐந்து கச்சேரிகளை கேட்ட திருப்தி ஏற்பட்டது.
விருதுக்கு உரியவர்களை அறிவிக்க வந்த சுதா ரகுநாதனின் பேச்சு நெகிழ்ச்சியாக இருந்தது. “என்னுடைய இளம் பருவத்தில் மியூசிக் அகாடமியில் நான் பங்கெடுத்த போட்டிகள் என் நினைவில் இப்போது வருகிறது. யார் வெற்றி பெற்றாலும் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்போம். இங்கே நடந்ததும் போட்டி என்பதை விட, ஒரு இசை திருவிழாவாகவே பார்க்கிறோம்.
குரல், ஸ்ருதி சுத்தம், தாளக்கட்டு, ராகம் பாடுவதில் இருக்கும் கற்பனை, வார்த்தை உச்சரிப்பு, சங்கதிகள் இப்படி பல விஷயங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு, இங்கு பாடியவர்களில் ஸ்ருதி சங்கர் குமார், முரளி சங்கீத் இருவரும் இந்த ஆண்டுக்கான எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது 2017 விருதைப் பகிர்ந்து கொள்கின்றனர்” என்றார் சுதா ரகுநாதன்.
கர்னாடக இசை உலகில் இன்றைக்கு புகழின் உச்சியில் இருக்கும் மூத்த கலைஞர்களான சீனிவாச ராவ் (வயலின்), வைத்யநாதன் (மிருதங்கம்), ரமணி (கடம்) ஆகியோர் இளம் கலைஞர்களுக்கு பக்கவாத்தியம் வாசித்தது இளம் கலைஞர்களின் பாக்கியம்.
விருதுக்கு தேர்வான பாடகர்களைப் பாடவைத்து ‘சரிகமா’ நிறுவனம் இசை ஆல்பம் வெளியிடும் என்பது இதில் கூடுதல் சிறப்பு. நல்லி சின்னசாமி செட்டி ஆதரவுடன் நடத்தப்பட்ட இவ்விழாவில் பங்கேற்ற நல்லி குப்புசாமி, “எம்.எஸ்.ஸுக்கு ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 1 அன்று ஹெச்.எம்.வி. நிறுவனத்திடம் இருந்து ராயல்டி தொகை தவறாமல் வந்துவிடும். அந்தளவுக்கு நேர்மையான நிறுவனம்.
அந்த ஹெச்.எம்.விதான் ‘சரிகம’ நிறுவனமாக பெயர் மாறியிருக்கிறது” என்றார். விழாவில் ‘தி இந்து’ தமிழிலும் ஆங்கிலத்திலும் பதிப்பித்த எம்.எஸ். புத்தகங்களை சுதா ரகுநாதன் வெளியிட எஸ்.ராஜேஸ்வரி பெற்றுக் கொண்டார். இசைக் கவி ரமணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT