Published : 18 Jul 2023 06:07 AM
Last Updated : 18 Jul 2023 06:07 AM
சென்னை: சிறைக் கைதிகளுக்கு 5-ம் கட்டமாகவும், சீர்திருத்தப் பள்ளிகளில் உள்ள சிறுவர்களுக்கு 2-ம் கட்டமாகவும் விளையாட்டுப் பயிற்சிஅளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில், சிறைக் கைதிகளுக்கு விளையாட்டுப் பயிற்சி அளிக்கும் ‘பரிவர்தன் - பிரிசன் டூ பிரைட்’ என்ற திட்டம் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதேபோல, சிறார் சீர்த்திருத்த பள்ளிகளை சேர்ந்த சிறுவர்களுக்கு ‘நயி திஷா- ஸ்மைல் ஃபார் ஜுவனைல்’ என்ற திட்டத்தின்கீழ் விளையாட்டுப் பயிற்சி அளிக்கும் திட்டம்கடந்த ஜனவரி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சிறைக் கைதிகளுக்கு 5-ம் கட்டமாகவும், சிறார் சீர்திருத்தப் பள்ளிகளை சேர்ந்த சிறுவர்களுக்கு 2-ம் கட்டமாகவும் விளையாட்டுப் பயிற்சி அளிக்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. 7 சிறைச் சாலைகள் மற்றும் 18 சீர்திருத்தப் பள்ளிகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா, ‘‘விளையாட்டுப் பயிற்சி அளிப்பதன் மூலம் உடல்அளவிலும், மனதளவிலும் புத்துணர்ச்சி ஏற்படும். விளையாட்டுகள் மனிதர்களுக்கு ஒழுக்கத்தை ஏற்படுத்துவதோடு, குழுவாக இணைந்து பணிபுரியும் எண்ணத்தையும் ஏற்படுத்தும்.
குறிப்பாக, சிறார் சீர்திருத்தப் பள்ளிகளை சேர்ந்த சிறுவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சி அளிப்பதன் மூலம்அவர்களுக்கு நல்லொழுக்கம்ஏற்படுவதோடு, தன்னம்பிக்கையும் வளரும். சமூகத்தின் மிகவும் பின்தங்கிய மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செயல்படுத்தப்படும் இத்திட்டத்துக்கு அரசுதொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT