Published : 18 Jul 2023 11:01 AM
Last Updated : 18 Jul 2023 11:01 AM
திருப்பத்தூர்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையால் திருப்பத்தூரில் பேருந்துகள் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல் உட்பட பல்வேறு விழாக்களில் பங்கேற்க தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று காலை திருப்பத்தூர் மாவட்டத்துக்கு வந்தார்.
ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்துவற்காக பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டது. 14 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருந்ததால் 20 ஆயிரம் பேர் வரை அழைத்து வர தனியார் பேருந்துகள் மட்டுமின்றி அரசு பேருந்துகளையும் திமுக நிர்வாகிகள் பயன்படுத்தினர்.
திருப்பத்தூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள் அரசு நலத்திட்ட உதவி பெறும் பயனாளிகள் மற்றும் பொதுமக்களை அழைத்துச்செல்ல சென்றுவிட்டதால் பேருந்து பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
நேற்று ஆடிமாத முதல் நாள் என்பதால் கோயில்களுக்கு செல்லவும், ஆடி அமாவாசை தினம் என்பதால் திருப்பத்தூரில் இருந்து மேல் மலையனூர், திருவண்ணாமலை போன்ற பகுதிகளுக்கு செல்ல ஏராளமான பொதுமக்கள் திருப்பத்தூர் பேருந்து நிலையத்துக்கு வந்தனர். ஆனால், குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டதால் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து அவதிக்குள்ளாகினர்.
அதேபோல, திருப்பத்தூரில் இருந்து கிராமப்பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளும் இல்லாததால் கிராம மக்கள் கடும் சிரமத்தை எதிர்க்கொண்டனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘அமாவாசை, பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் திருப்பத்தூரில் குறைவான பேருந்துகள் தான் இயக்கப்படுகின்றன. நகர்ப்புறத்தை காட்டிலும் கிராமப்பகுதிக்கும், மலை பகுதிகளுக்கும் செல்ல போதுமான பேருந்து வசதி இருப்பதில்லை. இந்த குறையே தீர்ந்தபாடில்லை என்ற நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு வந்ததை தொடர்ந்து, அந்த கூட்டத்துக்கு அதிக அளவிலான பயணிகளை அழைத்துச் செல்ல அரசுப் பேருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று (நேற்று) ஆடி அமாவாசை தினம் என்பதால் மேல் மலையனூர் செல்ல நூற்றுக் கணக்கான மக்கள் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் மணிக்கணக்கில் காத்திருந்தும் ஒரு பேருந்துகூட வரவில்லை. இதனால் சிலர் வீட்டுக்கே சென்று விட்டனர். அமைச்சரை சந்தோஷப்படுத்த ஆட்சியில் இருப்பவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால் பொதுமக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர்" என்றனர்.
இது குறித்து போக்குவரத்து பணிமனை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ‘‘சேலம் மற்றும் விழுப்புரம் மண்டலத்தில் இருந்து சில பேருந்துகள் அமைச்சர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பயனாளிகளை அழைத்துச்செல்ல முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. அவை தவிர மற்ற பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.
ஆடி அமாவாசை தினம் என்பதால்வழக்கத்தைக் காட்டிலும் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்தது. பேருந்துக்காக சிலர் மட்டுமே காத்திருந்தனர். உடனுக்குடன் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டன’’ என்றனர். அமாவாசை, பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் திருப்பத்தூரில் குறைவான பேருந்துகள்தான் இயக்கப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT