Last Updated : 20 Nov, 2017 09:53 AM

 

Published : 20 Nov 2017 09:53 AM
Last Updated : 20 Nov 2017 09:53 AM

தடுப்பணை கட்டும் திட்டம் தாமதத்தால் பாலாற்றில் உப்புநீர் ஊடுருவல் அதிகரிப்பு: வாயலூர், நல்லாத்தூர், பொம்மராஜபுரம், ஆயப்பாக்கம் விவசாயிகள் புகார்

நல்லாத்தூர் பாலாற்றில் தடுப்பணை கட்டும் திட்டம் தாமதப் படுத்தப்பட்டு வருவதால், உப்புநீர் ஊடுருவல் அதிகரித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளின் பாசனத்துக்கான தண்ணீர் தேவையை பூர்த்திசெய்வதில் பாலாறுக்கு பெரும் பங்கு உண்டு. சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. இந்நிலையில், பாலாற்றில் தடுப்பணை அமைக்கப்படாமல் உள்ளதால், மழைக்காலத்தில் ஏற்படும் நீர்வரத்தை சேமிக்க முடி யாத நிலையும் உள்ளது.

இதனால், பாலாற்றின் குறுக்கே பல்வேறு இடங்களில் தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து, பல்வேறு போராட்டங்களை நடத்தி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்து வருகின்றனர். ஆனால், திட்ட மதிப்பீடுகள் தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறதே தவிர, தடுப்பணை கட்டுவதற்கான உரிய நடவடிக்கைகள் இல்லை.

கரையோர கிராமங்களில்...

இதனால், கடந்த 3 ஆண்டுகளில் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் முழுவதும் கடலில் வீணாக கலந்தது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்ததால், செங்கல்பட்டுவை அடுத்த பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. எனினும், தடுப்பணை இல்லாததால் தண்ணீர் முழுவதும் வழக்கம்போல் கடலில் கலந்து வீணாகியது. இந்நிலையில், பாலாற்றின் கடைசி பகுதியில் உள்ள வாயலூர், நல்லாத்தூர், பொம்மராஜபுரம், ஆயப்பாக்கம் ஆகிய பகுதிகளின் பாலாற்று படுகையில் உப்புநீர் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. இதனால், கரையோர கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அணுமின் நிலைய நிர்வாகத்துடன் இணைந்து நல்லாத்தூர் பகுதியில் தடுப்பணை கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்தது. ஆனால், மாதங்கள் பல கடந்தும் இத்திட்டமும் கிடப்பில் உள்ளது. இதனால், உப்புநீர் ஊடுருவல் மேலும் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் புகார் தெரிவிக்கின்றனர்.

விவசாயிகள் சங்கம் முறையீடு

இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கச் செயலாளர் நேரு கூறியதாவது: அணுமின் நிலை யம் நிதி அளிப்பதாக தெரிவித்ததால் விரைவில் தடுப்பணை கட்டப்படும் என நம்பினோம். ஆனால், இதிலும் பல்வேறு சிக்கல்களை பொதுப்பணித் துறை ஏற்படுத்திருப்பதாகக் கூறப் படுகிறது.

அதனால், நிதி அளிக்க முன்வந்த அணுமின் நிலைய நிர்வாகமும் தயக்கம் காட்டி வருகிறது. இதனால், தடுப்பணை அமைக் கும் பணிகளுக்கு பொதுப்பணித்துறை முட்டுக்கட்டையாக செயல்படுவதாக கருதுகிறோம் என்று முறையிட்டார்.

இதுகுறித்து, வாயலூர் முன் னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அப்துல் உசேன் கூறியதாவது: தடுப்பணை கட்ட நிதி ஒதுக்க தாமதம் ஏற்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. தற்போது, கடல் நீர் ஊடுருவி வருவதால் கரையோர குடிநீர் கிணறுகளிலும் உப்புநீர் சுரப்பு ஏற்பட்டுள்ளது. இதேநிலை நீடித்தால், பாலாற் றின் கரையோர கிராமங்களில் உள்ள விளைநிலங்கள், விவசாயத்துக்கு லாயக்கற்ற நிலமாக மாறும் அபாயம் உள்ளது. அதனால், தடுப்புச் சுவர் அமைப்பதற் கான நடவடிக்கைகளையாவது மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண் டார்.

பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம்

இதுகுறித்து, பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் காஞ்சி அமுதன் கூறியதாவது: தடுப்பணை கட்டுவதற்காக ரூ.36 கோடி நிதி வழங்க சம்மதம் தெரிவித்த அணுமின் நிலைய நிர்வாகத்திடம், தடுப்புச் சுவர் கட்டவும் நிதி கோரப்பட்டுள்ளது. இதனால், கூடுதல் நிதி கோரப்பட்டுள்ளதற் கான காரணங்களை அணுமின் நிலைய நிர்வாகம் கேட்டுள்ளது.

அதற்கான, சரியான காரணங்களைக் கூற முடியாமல் மாவட்ட நிர்வாகம் திணறி வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் இத்த கைய செயல்பாடுகளால், தடுப்பணை கட்டும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ‘‘அணுமின் நிலைய நிர்வாகத்திடம் தடுப்பணைக்காக திட்ட மதிப்பீடு தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. விரைவில் ஒப்புதல் கிடைக்குமென நம்புகிறோம்.

தடுப்புச் சுவர் அமைப்பது அவசியம். ஏனெனில் தடுப்பணை அருகே உப்புநீர் தேங்கி நின்றால் அணையின் மறுபக்கம் தேக்கப்படும் நன்னீரும் பாதிக்கப்படும். அதனால், 2 பணிகளையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் வகையில் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக் கின்றன’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x