Published : 19 Jul 2014 12:00 AM
Last Updated : 19 Jul 2014 12:00 AM

54 ஆண்டுகளாக செங்கல் தயாரிப்பில் ஒரு கூட்டுறவு சங்கம்- கக்கன் அமைச்சராக இருந்தபோது லால்குடி அருகே தொடங்கப்பட்டது

தமிழக அமைச்சராக கக்கன் இருந்த காலத்தில் அவரது முயற்சியால் தொடங்கப்பட்டு 54 ஆண்டுகளாக செங்கல் தயாரிப்பில் வெற்றி கரமாக ஈடுபட்டு லாபத்தை ஈட்டி வருகிறது வெங்கடாஜலபுரம் அரிசன செங்கல் தொழிலாளர்கள் குடிசைத் தொழில் கூட்டுறவு சங்கம்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகிலுள்ளது வெங்கடாஜலபுரம் கிராமம். இந்த கிராமத்தில் ஏழை ஆதிதிராவிட மக்கள் வேளாண் பணிகள் இல்லாத காலத்தில் வருமானம் இன்றி வறுமையில் வாடி வந்தனர். இந்த பகுதியில் கிடைக்கும் வண்டல் மண்ணைப் பயன்படுத்தி செங்கல் சூளை அமைத்தால் அதன் மூலம் இத் தொழிலாளர்களுக்கு வருமானம் கிடைக்கும் என்ற நல்ல எண்ணத்தில் முன்னோடி விவசாயிகள் சிலர் 1960-ம் ஆண்டில் அரசை நாடினர்.

அப்போது காமராஜர் அமைச் சரவையில் அமைச்சராக இருந்த கக்கன் கவனத்துக்கு இந்த கோரிக்கை எடுத்துச் செல்லப்பட்ட தன் விளைவாக அவரது பெருமுயற்சியால் இந்த சங்கம் 25.3.1960-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டு செங்கல் தயாரிப்புப் பணியைத் தொடங்கியது. தொடர்ந்து 54 ஆண்டுகளாக தரமான செங்கலை தயாரிப்பதோடு லாபகரமாகவும் செயல்பட்டு வருகிறது.

வண்டல் + மணல் = உறுதி என்ற தாரக மந்திரத்தோடு செயல்பட்டு வரும் இந்த சங்கத்தில் தற்போது 319 உறுப்பினர்கள் உள்ளனர். தமிழக அரசு ரூ.2.14 லட்சமும், உறுப்பினர்கள் பங்குத் தொகை ரூ.6.62 லட்சமும் கொண்டு இந்த சங்கம் செயல்பட்டு வருகிறது.

குறைந்த விலையில்

இந்த பகுதியில் உள்ள தனியார் சேம்பர் செங்கற்களைக் காட்டிலும் இந்த சங்கத்தால் தயாரிக்கப்படும் செங்கல் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு 1,000 செங்கற்களின் விலை ரூ.4,200. ஆனால், தனியார் சேம்பர்களில் ரூ.4,500 முதல் ரூ.6,000 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

இங்கு தயாரிக்கப்படும் இண்ட்கோ பிரிக்ஸ் என்ற செங்கல்லுக்கு தற்போது கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள 300-க்கும் மேற்பட்டோர் இந்த சங்கத்தின் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

சொந்த இடத்தில் சூளை

இதுகுறித்து திருச்சி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஏ.ராஜராஜன் ‘தி இந்து’விடம் கூறியது: தினந்தோறும் 90 தொழிலாளர்கள் தினக்கூலி அடிப்படையில் இங்கு செங்கல் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் செங்கல் சூளை அமைக்கப்பட்டுள்ள இடம் போக மீதமுள்ள 12 ஏக்கர் நிலத்தில் கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு, கூடுதல் வருமானமும் ஈட்டப்படுகிறது.

இங்கு பணியாற்றும் தொழிலா ளர்கள், தங்களுக்கு நிரந்தர குடியிருப்புகள் கட்டித் தர வேண்டுமென கோரிக்கை விடுத் துள்ளனர். இது தொடர்பாக நடவடிக் கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.

மேலும் உற்பத்தியை அதிகரிக் கும் வகையில் ‘வெர்டிக்கல் சாப்ட் பிரிக் கிளின்’ எனப்படும் தொழில்நுட்பத்தை இங்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு வருகிறது என்றார்.

விற்பனை இலக்காக ரூ.95 லட்சம்

இந்த சங்கத்தில் 2014-15-ம் ஆண்டுக்கு விற்பனை இலக்காக ரூ.95 லட்சம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களில் மட்டும் ரூ.15.85 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கூட்டாக கைகோர்த்தால் எதை யும் சாதிக்கலாம் என்பதற்கு ஒற்றுமையுடன் செயல்பட்டு 54 ஆண்டுகளாக லாபத்தில் இயங்கி வரும் இச்சங்கம் சான்றாக உயர்ந்து நிற்கிறது என்றால் அது மிகையல்ல.

வெங்கடாஜலபுரம் செங்கல் தொழிலாளர்கள். (அடுத்த படம்) குடிசைத் தொழில் கூட்டுறவு சங்கத்தில் செங்கல் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

இந்த சங்கத்தில் 2011-12-ம் ஆண்டில் ரூ.1.05 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு, இதில் கூலியாக ரூ.21.33 லட்சம் அளிக்கப்பட்டு, ரூ.23.60 லட்சம் லாபம் ஈட்டியுள்ளது. 2012-13-ம் ஆண்டில் ரூ.1 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு, இதில் கூலியாக ரூ.23.15 லட்சம் அளிக்கப்பட்டு, ரூ.13.11 லட்சம் லாபம் ஈட்டியுள்ளது. 2013-14-ம் ஆண்டில் ரூ.1 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு, கூலியாக ரூ.36.44 லட்சம் அளிக்கப்பட்டு ரூ.11.28 லட்சம் லாபம் ஈட்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x