Published : 18 Jul 2023 03:03 AM
Last Updated : 18 Jul 2023 03:03 AM
மதுரை: தனியார் செப்டிக் டேங்க் லாரி உரிமையாளர்கள் மதுரையில் 19ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் மாநகராட்சியின் 100 வார்டுகளில் கழிவு அகற்றும் பணி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், செப்டிக் டேங் கழிவுநீர் நிரம்பும் பகுதிகளில் சுகாதார சீர்கேடு அச்சமும் ஏற்பட்டு உள்ளது.
மதுரை மாநகராட்சியில் 300 செப்டிக் கழிவு நீர் லாரிகள் உள்ளன. இவர்கள் மாநகராட்சியின் 100 வார்டுகளில் பாதாளச் சாக்கடை இல்லாத குடியிருப்புகளில் தனியார் வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்களில் சேகரிக்கும் செப்டிக் கழிவு நீரை சேகரித்து மாநகராட்சி கழிவு நீர் பம்பிங் ஸ்டேஷனில் ஊற்றுவார்கள். கடந்த காலத்தில் இவர்கள் கழிவு நீரை ஊற்றுவதற்கு மண்டலத்திற்கு இரண்டு பம்பிங் ஸ்டேஷன்கள் ஒதுக்கியிருந்தனர். இந்த பம்பிங் ஸ்டேஷனில் தனியார் செப்டிக் டேங்க் கழிவு நீர் லாரிகள் கழிவுநீரை ஊற்றுவதற்கு ஆண்டிற்கு ஒரு செப்டிக் டேங்க் லாரிக்கு ரூ.30 ஆயிரம் கட்டணம் செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக மாநகராட்சி பம்பிங் ஸ்டேஷன்களில் கழிவு நீர் ஊற்றுவதற்கு மாநகராட்சி அனுமதிப்பதில்லை என்று கூறப்படுகிறது. அதனால், புறநகரில் உள்ள வெள்ளக்கல் உரக்கிடங்கில் உள்ள கழிவு நீர் பம்பிங் ஸ்டேஷனில் ஊற்றுமாறு மாநகராட்சி தனியார் பம்பிங் ஸ்டேஷன் லாரி உரிமையாளர்களை அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வெள்ளக்கல் உரக்கிடங்கு பம்பிங் ஸ்டேஷனில் செப்டிக் டேங் கழிவு நீரை ஊற்றவதற்கும் தடை விதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அதனால், தனியார் செப்டிக் டேங் உரிமையாளர்கள் நேற்று செப்டிக் டேங்க் கழிவுநீரை எங்கு போய் ஊற்றுவது என்று தெரியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து மனு வழங்கினர். அந்த மனுவில் செப்டிக் டேங்க் கழிவு நீரை மாநகராட்சி பம்பிங் ஸ்டேஷனில் கொட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று முறையிட்டனர்.
இதுகுறித்து மதுரை மாவட்ட மனித கழிவு நீர் வாகன மேலாண்மையாளர்கள் நலச்சங்கம் தலைவர் ஜனதாராம் கூறியதாவது: மதுரை மாநகர், புறநகர் பகுதிகளில் மாநகராட்சி செப்டிக் டேங்கில் உள்ள கழிவு நீர்களை தனியார் வாகனம் மூலம் அகற்றும் பணியினை கடந்த 8 ஆண்டாக மேற்கொண்டு வருகிறோம். இந்த கழிவு நீர்களை கொண்டு சென்று ஊற்றுவதற்கு மாநகராட்சி அனுமதியோடு மாநகரில் எங்களுக்கு ஒதுக்கி கொடுத்துள்ள 18 கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் மாநகராட்சி சட்ட திட்டப்படி அதிகாரிகள் அறிவுரைப்படி முறையாக கழிவு நீரினை ஊற்றிக் கொண்டு இருந்தோம்.
இதற்கு உண்டான கட்டணத்தொகையையும் வழங்கினோம். ஆனால், தற்போது கழிவுநீரை ஊற்ற அனுமதி மறுப்பதால் எங்கு போய் ஊற்றுவது எனத் தெரியாமல் தவிக்கிறாம். எங்களை பம்பிங் ஸ்டேஷன் தனியார் பராமரிப்பாளர்கள் ஊற்றவிடாமல் தடுக்கிறார்கள். அதிகாரிகளும் அவர்களுக்கு ஆதரவாக உள்ளனர். அதனால், வரும் 19ம் தேதி புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஜிபிஎஸ் கருவி பொருத்த மறுக்கிறார்கள்: இதுகுறித்து மேயர் இந்திராணியிடம் கேட்டபோது, ‘‘செப்டிக் டேங் லாரி உரிமையாளர்கள், முறையாக மாநகராட்சி அனுமதியுடன் பம்பிங் ஸ்டேஷனில் கழிவு நீரை ஊற்றவதற்கு வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்த கூறியுள்ளோம். மாநகராட்சியில் செப்டிக் டேங் கழிவு நீரை பாதுகாப்பாக அப்புறப்படுத்த பிரத்தியேக சட்ட விதிமுறைகள் வந்துள்ளது. அந்த அடிப்படையிலே நாங்கள் ஜிபிஎஸ் கருவி பொருத்த கூறுகிறோம். ஜிபிஎஸ் கருவி பொருத்தினால், அவர்கள் கழிவு நீரை கண்ட இடங்களில் கொட்ட முடியாது. மாநகராட்சி அறிவுறுத்தும் பம்பிங் ஸ்டேஷன்களில் மட்டுமே கொட்ட முடியும். அதற்கு அவர்கள் மறுக்கின்றனர்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT