Published : 17 Jul 2023 09:33 PM
Last Updated : 17 Jul 2023 09:33 PM
வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் மலைப் பாதையில் திங்கள்கிழமை மாலை திடீரென காட்டுத் தீ பரவியது. இதையடுத்து பக்தர்கள் கீழே இறங்க தடை விதித்த வனத்துறையினர் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலில் தவித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5 ஆயிரம் அடி உயரத்தில் சதுரகிரி மலை அமைந்துள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்கள் உள்ளன. இங்கு திங்கள்கிழமை அமாவாசையை முன்னிட்டு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், மாலை 6 மணிக்கு மேல் ஸ்ரீவில்லிபுத்தூர் வனக்கோட்டம் சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட தவசிப்பாறை 5-வது பீட்டில் சதுரகிரி செல்லும் மலைப்பாதையில் இரட்டை லிங்கம் மற்றும் பச்சரிப்பாறை இடையே உள்ள நாவலூற்று பகுதியில் திடீரென காட்டுத் தீ பரவியது.
கடந்த இரு மாதங்களாக இப்பகுதியில் மலை இல்லாததால் காட்டாறுகள், ஓடைகளில் நீர்வரத்து இன்றி வனப்பகுதி வறண்டு காணப்பட்டதால் காட்டுத் தீ வேகமாக பரவியது. இதையடுத்து சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையில் இருந்து இறங்க தடை விதிக்கப்பட்டு கோயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
சாப்டூர் ரேஞ்சர் செல்லமணி தலைமையில் 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தால் பக்தர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. மேலும் தீயை அணைத்த பின்னரே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘காட்டுத் தீ மாலை நேரத்தில் பரவியதால் பெரும்பாலன பக்தர்கள் அடிவாரத்திற்கு திரும்பி விட்டனர். இல்லையென்றால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். ஏற்கனவே 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை காரணம் காட்டி சதுரகிரி கோயிலுக்கு செல்ல வனத்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சுற்றுச்சூழல் பராமரிப்பு கட்டணமாக ஒருவருக்கு ரூ.10 கட்டணமாக வசூலித்தும் வனப்பகுதியை பராமரிக்கவில்லை. வனத்து றையின் கண்காணிப்பு குறைபாட்டால் நடைபெறும் இதுபோன்ற விபத்துகளுக்கு கோயிலை காரணம் காட்டி பக்தர்களுக்கு மேலும் காட்டுபாடு விதிக்கவே வனத்துறை முயலும் என பக்தர்கள் குற்றம்சாட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT