Published : 17 Jul 2023 05:58 PM
Last Updated : 17 Jul 2023 05:58 PM
சென்னை: தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறையினர் நடத்தி வரும் சோதனையில், ரூ.10 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் ரூ.70 லட்சம் மதிப்பிலான இந்திய ரூபாய் உள்பட மொத்தம் ரூ.80 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை சுமார் 7.30 மணி முதல் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி எம்.பி வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை சைதாப்பேட்டை மற்றும் விழுப்புரம் சண்முகபுரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், விழுப்புரம் விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி இல்லத்துக்கு வந்த தடய அறிவியல் நிபுணர்கள், ஆவணங்கள் ஏதும் அழிக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், இந்த சோதனையின்போது, அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் ரூ.70 லட்சம் மதிப்பிலான இந்திய ரூபாய் உள்பட மொத்தம் ரூ.80 லட்சத்தை அமலாக்கத் துறையினர் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்தப் பணம் குறித்து அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத் துறை எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து, கணக்கில் காட்டப்படாத பணம் என்பதால், அந்தத் தொகையை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வரும் சென்னையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் இல்லத்துக்கு காலை முதலே பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்பான அதிகாரி, வங்கிக் கணக்கு விவரங்கள் தொடர்பான அதிகாரி வந்தனர். இதைத்தொடர்ந்து இந்தியன் வங்கியின் நகை மதிப்பீட்டாளர்கள் இருவரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து கடந்த ஜூன் 19-ம் தேதி உத்தரவிட்டதன் பின்புலம் விரிவாக இங்கே > அமலாக்கத் துறை சோதனை | அமைச்சர் பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி வழக்கின் முழு பின்புலம்
இதனிடையே, அமலாக்கத் துறை சோதனை குறித்து திமுக கிஞ்சித்தும் கவலைப்படவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். | அதன் விவரம் > ''எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் நோக்கத்தை திசை திருப்பும் முயற்சி'' - அமலாக்கத்துறை சோதனை குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...