Published : 17 Jul 2023 02:11 PM
Last Updated : 17 Jul 2023 02:11 PM

தருமபுரி ஆட்சியர் அலுவலகத்துக்கு பாடையுடன் வந்த கிராம மக்களால் பரபரப்பு

தருமபுரி: மயான பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தக் கோரி தருமபுரி ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று (ஜூலை 17) பாடையுடன் மனு அளிக்க வந்த கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் இருமத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட டொக்கம்பட்டி கிராம மக்கள் இன்று குழுவாக தருமபுரி ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் பாடையுடன் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, அவர்கள் தரப்பை சேர்ந்த சிலரை மட்டும் ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று மனு அளிக்க அனுமதி அளித்தனர்.

கிராம மக்களிடம் கேட்டபோது, 'எங்கள் கிராமத்தில் மயானமாக பயன்படுத்தி வந்த 15 சென்ட் நிலம் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலம் என்று தனியார் ஒருவரால் தற்போது வேலி அமைக்கப்பட்டுவிட்டது. எனவே, கிராமத்தில் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கு மயானம் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். எனவே, நாங்கள் ஏற்கெனவே மயானமாக பயன்படுத்தி வந்த இடத்தை மீட்டு எங்களுக்கு மயான பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும். அல்லது, மயான தேவைக்காக புதிய இடத்தை ஒதுக்கி தர வேண்டும்.

தொடர்ந்து இந்த கோரிக்கை தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் தீர்வு ஏற்படவில்லை. அந்த விரக்தியால்தான் பாடையுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு முறையிட வந்தோம்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x