Published : 17 Jul 2023 12:41 PM
Last Updated : 17 Jul 2023 12:41 PM

எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் அமலாக்கத் துறையை பாஜக ஏவி வருகிறது: திமுக

அமைச்சர் பொன்முடி இல்லத்தின் வெளியே ஆர்.எஸ்.பாரதி

சென்னை: எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் அமலாக்கத் துறையை பாஜக ஏவி வருவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டினார்.

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை சுமார் 7.30 மணி முதல் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் பொன் முடியின் மகன் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடியின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சோதனை நடைபெறும் சைதாப்பேட்டை வீட்டுக்கு வருகை தந்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "முதல்வர் தனது பிறந்த நாள் விழாவில், யார் பிரதமராக வர வேண்டும் என்பதைவிட, யார் வரக் கூடாது என்பது தான் முக்கியம் என்று பேசினார். அதன் பிறகு தொடர்ந்து மத்திய அரசு, ஆளுநர் மூலமாக சில நெருக்கடிகளையும், தற்போது அமலாக்கத் துறை மூலமாக நெருக்கடிகளையும் தந்து கொண்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் பாட்னா கூட்டத்தில் கலந்து கொண்டபோது செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடைபெற்றது. தற்போது பெங்களூரு கூட்டத்தின் கவனத்தை திசை திருப்பவே பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை செய்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் அமலாக்கத் துறையை பாஜக ஏவி வருகிறது.

எந்த வழக்கு என்று தெரிந்துகொள்ள, அவரின் வழக்கறிஞர் என்ற முறையில் எனக்கு உரிமை உள்ளது. ஆனால், எங்களை அனுமதிக்கவில்லை. சட்ட ஆலோசனை வழங்குவதற்குக் கூட உள்ளே அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட வழக்கில் நெருக்கடி அளிக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்கை வைத்து மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. திமுக எந்த மிரட்டலுக்கும் அஞ்சாது" என்று அவர் கூறினார்.

முன்னதாக, அமலாக்கத் துறை சோதனை குறித்து திமுக கிஞ்சித்தும் கவலைப்படவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். | அதன் விவரம் > ''எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் நோக்கத்தை திசை திருப்பும் முயற்சி'' - அமலாக்கத்துறை சோதனை குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்

எந்த வழக்கில் ‘சோதனை’? - கடந்த 2006-11-ம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

விழுப்புரத்தில் உள்ள எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உள்ளதாகவும், இது தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x