Published : 17 Jul 2023 08:10 AM
Last Updated : 17 Jul 2023 08:10 AM
நந்திவரம்: நாளுக்கு நாள் மின்சார பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. கார்கள் வரைக்கும் மின்சார பயன்பாடு வந்துவிட்டது. ஏ.சி., ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், எலெக்ட்ரிக் குக்கர் என வீடுகளில் அன்றாட வாழ்க்கைக்கு மின்சாரமின்றி ஏதுமில்லை. அனைத்துக்கும் மின்சாரம் தேவையாய் இருக்கும்போது அடிக்கடி ஏற்படும் மின்தடை மக்களை கடும் மனஉளைச்சலுக்கு ஆளாக்குகிறது. மின்தடை ஒருபுறம் மின் கட்டண உயர்வு மறுபுறம் எனஅவதிக்குள்ளாக்கி வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், நந்திவரம் - கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் பகுதிக்கு, கிழக்கு, மேற்கு, நகரம், ஊரப்பாக்கம் என, 4 மின் உதவி பொறியாளர் அலுவலகங்கள் உள்ளன. இங்கு சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடு மற்றும், வர்த்தக இணைப்புகள் உள்ளன. இப்பகுதிகளுக்கு, 33/11 திறன் கொண்ட, கூடுவாஞ்சேரி, தைலாவரம் பகுதி துணை மின் நிலையங்கள், 110/11 திறன் கொண்ட பொத்தேரி துணை மின் நிலையம் ஆகியவற்றில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.
இப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காலை, இரவு நேரங்களில் அடிக்கடி திடீர் மின்தடை ஏற்படுகிறது. லேசான மழை பெய்தாலே மின் துண்டிப்பு செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்களுக்கும், வர்த்தக நிறுவனங்களிலும், அன்றாட பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. மின் துண்டிப்புக்கான காரணம் பற்றி எந்தத் தகவலும் மின்சார வாரியத்தால் பொது மக்களுக்கு தெரிவிப்பது இல்லை.
குறிப்பாக நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, ஊரப்பாக்கம், தைலாவரம், ஆதனூர் பகுதிகளில் தொடர்ந்து பகல், இரவு நேரங்களில் அடிக்கடி திடீர் மின்வெட்டு ஏற்படுகிறது என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். மின்சாரம் எப்போது தடைபடும், எப்போது வரும் என தெரியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.
அடிக்கடி ஏற்படும் திடீர் மின்வெட்டால் இப்பகுதி மக்கள் வேதனையின் உச்சத்துக்கே சென்றுவிட்டனர். இரவு நேரத்தில், மின்சாரம் நிறுத்தப்படுவதால், நிம்மதியாக தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதன் தொடர்ச்சியாக மின்தடையை கண்டித்து, சாலை மறியல், முற்றுகை என போராட்டங்கள் நடைபெற்றாலும்,பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தபாடில்லை.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியாதாவது:
தேவி பிரியா: அறிவிக்கப்படாத மின்வெட்டால் பள்ளி, அலுவலகங்களுக்கு தாமதமாக செல்லும்நிலை ஏற்படுகிறது. மின்தடை குறித்து மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தால் அவர்கள்சரிவர வருவதில்லை. அப்படியே வந்தாலும் பெயரளவில் மட்டும் சரிசெய்து செல்கின்றனர். மீண்டும் மின்தடை ஏற்படுகிறது.
சில சமயம் ஹை வோல்டேஜில் மின் விநியோகம் செய்வதால், வீட்டில் உள்ள மின்சார அடுப்பு, துணி துவைக்கும் இயந்திரம் போன்ற மின்சாதன பொருட்கள் பழுதாகும் நிலை ஏற்படுகிறது.
தனலட்சுமி: இன்று மின்சாரம் இல்லாமல் எதுவும் நடக்காது என்ற நிலைக்கு பொதுமக்கள் வாழ்க்கை மாறி விட்டது. எல்லா சாதனங்களும் மின்சாரத்தால் இயங்குவதால், மின்சாரம் தடைபடும்போது இயல்பு வாழ்க்கை பாதிக்கிறது. குறிப்பாக காலையில் மின்தடை ஏற்பட்டால் பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுவர்.
இரவில் மின்தடை ஏற்பட்டால் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை தூக்கமின்றி அல்லல்படும் நிலை ஏற்படுகிறது. கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. முன்னரே அறிவித்து மின்தடை செய்தால் முன்கூட்டியே வேலைகளை முடித்து விடலாம். மின்தடை செய்வதை முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
சுந்தர்ராஜன்: பராமரிப்பு என்று சொல்லி அடிக்கடி வீடுகளில் மின்வெட்டு ஏற்படுத்துகின்றனர். இதுதொடர்பாக புகார் அளிக்க மின்வாரிய உதவி பொறியாளர்கள் அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டால், உரிய பதில் அளிக்கப்படுவதில்லை. அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் ஆன்லைனில் கல்வி கற்கும் மாணவர்கள், ஐடி ஊழியர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். முன்பெல்லாம் மின்தடை ஏற்படுவதற்கு முன்னர் (எஸ்.எம்.எஸ்.) குறுந்தகவல் வரும். திட்டமிட்டு நம் பணிகளை முன்பாக முடித்துக் கொள்ளலாம். ஆனால், தற்போது குறுந்தகவல் வருவதே இல்லை.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரி கூறியதாவது: வேண்டுமென்றே மின்தடையை ஏற்படுத்துவதில்லை. மழை காரணமாக மரங்கள், கிளைகள், பேனர்விழுந்து மின்கம்பிகள் சேதமடைகின்றன. மழை பெய்யும் நேரத்தில் மின் கம்பங்களில் உள்ள இன்சுலேட்டர் சேதமடைகிறது. இதனை சீர்செய்ய சில மணி நேரம் ஆவதால், அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். சில நேரங்களில் பழுதை கண்டறியவே பல மணி நேரம் ஆகிறது. அதனை கண்டுபிடித்து சீரமைக்க காலதாமதம் ஏற்படுகிறது. பொது மக்களுக்கு சேவை செய்யவே மின்வாரியம் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT