Published : 17 Jul 2023 06:14 AM
Last Updated : 17 Jul 2023 06:14 AM
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் நேற்று வெளியிட்டார். இதில் விழுப்புரம் மாணவர் பிரபஞ்சன் முதல் இடம் பிடித்துள்ளார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டுப் பிரிவில் சேலம் மாணவி கிருத்திகா முதலிடத்தை பிடித்துள்ளார்.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியலில், நீட் தேர்வில் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று, தேசிய அளவில் முதல் இடம் பிடித்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஜெ.பிரபஞ்சன் முதல் இடம் பிடித்துள்ளார்.
இவர், சென்னை அடுத்த மேலஅயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் படித்தவர். சென்னை மாணவர் என்.சூர்ய சித்தார்த் 715 மதிப்பெண்ணுடன் 2-வது இடமும், சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் எஸ்.வருண் 3-வது இடமும் பிடித்துள்ளனர். தரவரிசையில் முதல் 10 இடங்களில் 8 மாணவர்கள், 2 மாணவிகள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படித்தவர்கள்.
நிர்வாக ஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியலில் 715 மதிப்பெண் பெற்ற மாணவர் எஸ்.வருண் முதல் இடமும், 711 மதிப்பெண்ணுடன் சாமுவேல் ஹர்ஷித் சாபா 2-வது இடமும், 700 மதிப்பெண்ணுடன் ஷரான்மேத்யூ 3-வது இடமும் பிடித்துள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்கள்: அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சேலம் மாவட்ட மாணவி கிருத்திகா 569 மதிப்பெண்ணுடன் முதல் இடம் பிடித்துள்ளார். தருமபுரி மாவட்ட மாணவர் பச்சையப்பன் 565 மதிப்பெண்ணுடன் 2-வது இடமும், காஞ்சிபுரம் மாவட்ட மாணவர் முருகன்560 மதிப்பெண்ணுடன் 3-வது இடமும் பிடித்துள்ளனர்.
கட்-ஆப் மதிப்பெண்: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நடப்பாண்டில் கட்-ஆப்மதிப்பெண்கள் இடஒதுக்கீடு அடிப்படையில் 25 முதல் 40 மதிப்பெண்கள் வரை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நீட்தேர்வில் 27,064 பேர் 300-க்கும்அதிகமான மதிப்பெண் பெற்றிருந்தனர்.
நடப்பாண்டில் அந்த எண்ணிக்கை 37,672 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, 300 முதல் 720 வரையிலான மதிப்பெண் வரம்பில் ஏறத்தாழ 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர்.
கடும் போட்டி: நடப்பாண்டில் பொதுப் பிரிவுக்கு தோராயமாக 600 முதல் 602 வரைகட்-ஆப் மதிப்பெண் இருக்கக்கூடும். பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு 554முதல் 557 எனவும், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) பிரிவுக்கு 530 முதல் 534 எனவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 528 முதல் 531 எனவும், எஸ்சி மாணவர்களுக்கு 420 முதல் 429 எனவும் கட்-ஆப் மதிப்பெண்கள் உயர வாய்ப்புள்ளது. கட்-ஆப் மதிப்பெண் அதிகரிப்பதால் எம்பிபிஎஸ் படிப்புகளில் சேர கடுமையான போட்டி நிலவும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT