Published : 17 Jul 2023 05:25 AM
Last Updated : 17 Jul 2023 05:25 AM

செம்மொழிப் பூங்கா உள்ளிட்ட பூங்காக்களை உலகத் தரத்தில் மேம்படுத்த நடவடிக்கை

சென்னை: சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்கா உள்ளிட்ட முக்கிய பூங்காக்களை உலகத் தரத்துக்கு இணையாக மாற்ற தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

இது தொடர்பாக வேளாண்மை துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்கா, செங்காந்தள் பூங்கா, மாதவரம் பூங்கா, வண்ணாரப்பேட்டை பூங்கா உள்ளிட்டவற்றை, சிங்கப்பூர் உள்ளிட்ட மேலைநாடுகளில் உள்ள பூங்காக்களின் தரத்துக்கு உயர்த்த, தமிழக தோட்டக்கலைத் துறை முடிவு எடுத்துள்ளது.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி, வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், தோட்டக்கலைத் துறை இயக்குநர் ஆர்.பிருந்தா தேவி ஆகியார் சிங்கப்பூர் சென்றனர்.

கடந்த 13-ம் தேதி சிங்கப்பூரில் உள்ள தேசிய தாவரவியல் பூங்காவை அவர்கள் பார்வையிட்டனர், அப்போது, பூங்கா பராமரிப்பு, மரங்கள், பூச்செடிகள் வளர்ப்பு தொடர்பாக, பூங்காவின் முதுநிலை இயக்குநர் குவா ஹாக் சியாங், துணை இயக்குநர் நூரா உள்ளிட்டோர் விளக்கினர்.

இதுதவிர, சிங்கப்பூர் மெரினா நீர்த்தேக்கம் அருகில் உள்ள ‘கார்டன்ஸ் பை தி பே’ என்ற பூங்காவையும் அமைச்சர் பார்வையிட்டார். அந்தப் பூங்காவின் பராமரிப்பு தொடர்பாக, பூங்கா இயக்குநர் கேரி சூவா, அதிகாரி மே யோ ஆகியோர் விளக்கினர்.

பூங்காவின் சிறப்பம்சங்கள், காட்சிப்படுத்தப்பட்டுள்ள பூக்கள், ரோஜாத் தோட்டம், உலகின் மிகப் பெரிய செயற்கை நீர்வீழ்ச்சியின் அமைப்பு, நீரூற்று மற்றும் அவற்றின் பயன்பாடு குறித்தெல்லாம் அமைச்சர் உள்ளிட்டோர் கேட்டறிந்தனர். இதுதவிர, மரங்கள் வண்ண விளக்குகளுடன் எவ்வாறு காட்சிப்படுத்தப்படுகிறது என்பதையும், அமைச்சர் பார்வையிட்டார். அதேபோல, கடந்த 14-ம் தேதி சிங்கப்பூர் ‘ஜுவல் சாங்கி’ பூங்காவையும் பார்வையிட்டனர்.

இந்நிலையில், சிங்கப்பூர் பயணம், தமிழகத்தில் உள்ள பூங்காக்களை மேம்படுத்தத் தேவையான திட்டங்களை உருவாக்க பயனுள்ளதாக இருந்ததாக அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை செம்மொழிப் பூங்காவின் எதிரில், தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது. அங்கு உலகதரத்தில் பூங்கா அமைக்க தமிழக அரசு ஏற்கெனவே முடிவெடுத்த நிலையில், அமைச்சரின் சிங்கப்பூர் பயணம் மூலம் அந்த திட்டம் புதிய வடிவமைப்பு பெற உள்ளது.

இதுதவிர, செம்மொழிப் பூங்கா மற்றும் எதிரில் அமையவுள்ள பூங்காவுக்குச் சென்றுவரும் வகையில், நவீன இணைப்பு பாதை வடிவமைக்கப்பட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x