Published : 17 Jul 2023 05:16 AM
Last Updated : 17 Jul 2023 05:16 AM

கேரள கட்டிடக் கலையை பிரதிபலிக்கும் பொள்ளாச்சி ரயில் நிலைய முகப்பு கட்டிட வரைபடம்?

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் கட்டப்படவுள்ள முகப்புக் கட்டிடத்தின் மாதிரி வரைபடம்

பொள்ளாச்சி: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் கட்டப்படவுள்ள முகப்புக் கட்டிடம், கேரள கட்டிடக் கலையை பிரதிபலிக்கும் விதமாக இருப்பதாக பொள்ளாச்சி ரயில் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பொள்ளாச்சி ரயில் நிலையம் கடந்த 1915-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் கடந்த 2009-ம் ஆண்டு மீட்டர் கேஜ் ரயில் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. பணிகள் நிறைவடைந்து 2015-ம் ஆண்டு முதல் ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக ரயில் நிலைய வளாகத்தில் பழைய கட்டிடங்கள் அகற்றப்பட்டு, மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்வே சந்திப்பு அல்லது ரயில் நிலையங்களை மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பயணிகளுக்கான இருக்கைகள், காத்திருப்பு அறைகள், கழிப்பறை வசதிகள், மேற்கூரைகள், சுத்தமான குடிநீர் விநியோகம், குளிரூட்டப்பட்ட பயணிகள் காத்திருப்பு அறை, ரயில் வருகை மற்றும் புறப்பாடு குறித்த டிஜிட்டல் திரைகள் உள்ளிட்டவை மேம்படுத்தப்படுகின்றன. பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் மறு சீரமைத்தல் பணிக்கு ரூ.6.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, ரயில் நிலைய நடைமேடை மேற்கூரைகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகளை ஓராண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது, என்றனர்.

பொதுமக்கள் அதிருப்தி: பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கூறியதாவது:

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணியில் ரயில் நிலையக் கட்டிடத்தின் மாதிரி முகப்பு கட்டிட வரைபடம் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த வரைபடம், கேரள கட்டிடக் கலையை பிரதிபலிப்பதாக உள்ளது. இதேபோன்று கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் சொர்ணூர் ரயில் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து படத்துடன் டிவிட்டரில் தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு புகார் அனுப்பினோம். அதற்கு, கேரள கட்டிடக் கலையை போன்று கட்டவில்லை என அவர்கள் பதில் அளித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து சொர்ணூர் ரயில் நிலையத்தின் மாதிரி படத்துடன் மீண்டும் புகார் அனுப்பியுள்ளோம். பொள்ளாச்சியின் பாரம்பரிய கலாச்சாரத்தை குறிக்கும் வகையில் மாசானியம்மன் கோயில், சூலக்கல் மாரியம்மன் கோயில், பொள்ளாச்சி சுப்பிரமணியசாமி கோயில் ஆகிய கோயில்களின் ஏதாவது ஒரு கோயில் கோபுரத்தை போன்று பொள்ளாச்சி ரயில் நிலையத்தின் முகப்புக் கட்டிடத்தை வடிவமைக்க வேண்டும் என புகைப்படங்களுடன் கோரிக்கை வைத்துள்ளோம், என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x