Published : 17 Jul 2023 06:08 AM
Last Updated : 17 Jul 2023 06:08 AM
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னையை அடுத்த நெம்மேலியில் உள்ள ஆயிரம் காணி ஆளவந்தார் நாயகரால் வழங்கப்பட்ட அவரது சொத்துகளை, முதல்வரின் முத்திரைத் திட்டங்கள் என்ற பெயரைப் பயன்படுத்தி, தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க நடைபெறும் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும். இது தொடர்பாக கடந்த 12-ம் தேதி கடிதம் எழுதினேன்.
அந்தக் கடிதத்துக்கு, தமிழக அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு எழுதிய பதில் கடிதம் உடனடியாக கிடைத்தது. இதற்காக எனது நன்றிகள். அதேநேரத்தில், எனது கடிதத்தில் நான் எழுப்பியிருந்த முதன்மையான வினாக்களுக்கு, அறநிலையத் துறை அமைச்சரின் கடிதத்தில் எந்த பதிலும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலங்கள் வெளியில் தெரியாமல், தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறதோ என்ற சந்தேகத்தை மேலும் அதிகமாக்குகிறது.
ஆயிரம்காணி ஆளவந்தாரின் விருப்பங்கள் என்ன என்பதை, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, அவரது கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். ஆளவந்தார் அறக்கட்டளையின் சொத்துகள் இறைபணி தவிர, சமயக் கல்வி வழங்கவும், தமிழ் பிரபந்தங்களை கற்பிக்கவும்தான் செலவிடப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருப்பதையும் அமைச்சர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இவற்றுக்கு மாறாக, திரைப்பட நகரம் அமைப்பதற்காகவும், சூரிய ஒளி மின் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகவும் ஆளவந்தார் அறக்கட்டளை நிலங்களை தாரைவார்ப்பது சரியல்ல. தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலங்கள், ஒருபோதும் அரசுக்கு திரும்பியதில்லை என்பதுதான் வரலாறு.
எனவே, இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு, ஆயிரம்காணி ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலங்கள், அவரது விருப்பத்துக்கு மாறாக திரைப்பட நகரம் அமைத்தல், சூரிய ஒளி மின்திட்டங்களை செயல்படுத்தல், வீடுகளைக் கட்டுதல் போன்ற பணிகளுக்காக குத்தகைக்கு வழங்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
எந்த காலத்திலும், எதற்காகவும், ஆளவந்தாரின் நிலங்கள், அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதைத் தவிர்த்து, வேறு எந்தப் பணிக்கும் வழங்கப்படாது என்பதை அரசு பொது அறிவிப்பாக வெளியிட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT