Published : 17 Jul 2023 06:15 AM
Last Updated : 17 Jul 2023 06:15 AM
சென்னை: ஒடிசா பழங்குடியினர் ஓவியங்களின் கண்காட்சி சென்னையில் தொடங்கியது. இந்த கண்காட்சி வரும் 20-ம் தேதிவரை நடைபெறுகிறது.
ஒடிசா லலித் கலா அகாடமி மற்றும்அந்த மாநில ஒடிசா மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சாரத் துறை இணைந்து நடத்தும் பழங்குடியினரின் ஓவியக் கண்காட்சி, சென்னை ஈஞ்சம்பாக்கம் சோழமண்டலம் கலை கிராமத்தில் நேற்று தொடங்கியது.
கண்காட்சியை ஒடிசா இலக்கியம் மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் அஸ்வினி குமார் பத்ரா தொடங்கி வைத்து பார்வையிட்டார். ஒடிசாவை சேர்ந்த 25 பழங்குடியின கலைஞர்கள் வரைந்த 25 வண்ணமயமான ஓவியங்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 20-ம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியை பொதுமக்கள் காலை 10 முதல் இரவு 7 மணி வரை பார்வையிடலாம்.
கண்காட்சி குறித்து அமைச்சர்அஸ்வினிகுமார் கூறும்போது, ‘‘இந்தகண்காட்சி மூலம் எங்கள் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்களின்வாழ்வியல் முறைகள், திருமண சடங்குகள், கலாச்சாரம் போன்றவற்றை தமிழக மக்கள் அறிந்துகொள்ள முடியும். அத்துடன், ஒடிசா பழங்குடியின மக்களின் கலை ஆர்வத்தையும் ஊக்கப்படுத்தும்.
இந்த ஓவியங்கள் ஒடிசாவில் வாழும் பழங்குடியின மக்களின் அடையாளமாகும். கடந்த ஆண்டு டெல்லி, கொல்கத்தா போன்ற இடங்களில் நடத்தப்பட்ட கண்காட்சி, இந்த ஆண்டு சென்னையில் நடைபெறுகிறது. தொடர்ந்து நாட்டின் பிற இடங்களில் நடத்த திட்டமிட்டடுள்ளோம்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஒடிசா இலக்கியம் மற்றும் கலாச்சாரத் துறை இயக்குநர் திலிப் குமார் ரவுத்ராய், பத்ம விருது பெற்ற ஒடிசா லலித் கலா அகாடமியின் தலைவர் சுதர்சன் பட்நாயக், கலை விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் இந்திரன் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT