Published : 17 Jul 2023 06:00 AM
Last Updated : 17 Jul 2023 06:00 AM

மக்கள் பயன்பாட்டுக்கு வந்த கலைஞர் நூற்றாண்டு நூலகம்: ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் பார்வையிட்டு வியப்பு

கலைஞர் நூற்றாண்டு நூலக நுழைவாயிலில் உள்ள கலைஞர் சிலை முன் சுய புகைப்படம் எடுத்து மகிழும் குடும்பத்தினர்

மதுரை: மதுரையின் புதிய அடையாளமாக உருவெடுத்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ள நிலையில் நேற்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அடித்தளம், தரைத்தளம், 6 மாடிகளிலும் புத்தக அரங்குகள் என முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் இந்நூலகம் அமைந்துள்ளது.

கலைஞர் நூலகத்தில் உள்ள தொன்மையான பொருட்களின் அருங்காட்சியகத்தை பார்வையிடும் மக்கள்.
படங்கள்: நா.தங்கரத்தினம்

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நூலகத்தில் முதல் நாளான நேற்றே ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டனர். குறிப்பாக குழந்தைகளுக்கென பிரத்யேகமாக விளையாட்டு அரங்குகள் உள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேக வசதிகள் உள்ளன. நூலகம் முன்புள்ள கலைஞர் கருணாநிதி சிலை அருகே நின்று பொதுமக்கள் ஆர்வமுடன் சுய புகைப்படம் (செல்ஃபி) எடுத்துக்கொண்டனர்.

கலைஞர் நூலகம் பற்றி மக்கள் கூறிய கருத்துகள்:

சிறுமி ஷிபானா : குழந்தைகளுக்கு அனைத்து வகையான புத்தகங்களும் உள்ளன. அறிவியல் விளையாட்டுகள், சிறுவர்களுக்கான நவீன திரையரங்கு, மாதிரி விமானப் பயிற்சி போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் கவர்ந்தன. நான் முதன் முதலில் வந்து நூலகத்தைப் பார்த்தது பற்றி தோழிகளிடம் கூறி அவர்களையும் வந்து படிக்கச் சொல்வேன், என்றார்.

சிம்மக்கல் ஆர்.யமுனா: அறிவை வளர்க்கும் வகையில் லட்சக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. போட்டித்தேர்வர்கள் அமர்ந்து படிக்க நவீன வசதிகள் உள்ளன. நான் எம்ஏ ஆங்கில இலக்கியம் படித்துள்ளேன். நான் எதிர்பார்த்து வந்த ஆங்கில புத்தகங்கள் உள்ள அறைகள், அரங்குகள் திறக்காதது ஏமாற்றமாக உள்ளது.

செல்லூர் வி.கார்த்திகா: எம்ஏ தமிழ் இலக்கியம் படித்துள்ளேன். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருகிறேன். தமிழில் ஏராளமான புத்தகங்கள் உள்ளன. போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களும் உள்ளன. நூலகத்தைப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முழு அளவில் பயன்படுத்த வேண்டும்.

கடச்சனேந்தல் எம்.பரமசிவம் : சென்னை அண்ணா நூலகம் போல், மதுரைக்கு கலைஞர் நூலகம் அமைந்துள்ளது. நான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகிறேன். முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு எழுதிய நூல்களை ஆர்வமுடன் படித்து வருகிறேன்.

வடக்கு மாசி வீதி வி.தீபா: நான் சென்னையில் தங்கியிருந்தபோது அண்ணா நூலகம் போன்று மதுரையில் நூலகம் அமையாதா என எதிர்பார்த்தேன். அது தற்போது நிறைவேறியுள்ளது. தமிழக அரசுக்கு நன்றி. நூலகத்தை அனைவரும் பயன்படுத்த வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x