Published : 06 Nov 2017 09:52 AM
Last Updated : 06 Nov 2017 09:52 AM

கனமழை, வெள்ள பாதிப்பில் இருந்து சிட்லபாக்கம் பேரூராட்சியை மீட்க ரூ.96 கோடியில் நிரந்தர திட்டம்

ஒவ்வொரு மழையின்போதும் சிட்லபாக்கம் பேரூராட்சி பகுதிகள் முழுமையாக பாதிக்கப்படுகின்றன. இதனைத் தடுக்க ரூ.96 கோடியில் நிரந்தர தீர்வுக்கான புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

சிறுமழை என்றாலும் கனமழை என்றாலும் பெரிதும் பாதிக்கப்படும் பகுதிகளில் சிட்லபாக்கம் பேரூராட்சி பகுதியும் ஒன்று. சேலையூர், சிட்லபாக்கம் ஏரிகளின் உபரிநீர் மற்றும் கிழக்கு தாம்பரம், சிட்லபாக்கம் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் பேரூராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளைச் சூழ்கிறது. உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் மழைநீர் கால்வாய்கள் அமைத்தாலும் வெளியேறும் மழைநீரின் அளவு அதிகமாக இருப்பதால் சாலைகளிலும், குடியிருப்புகளைச் சூழ்ந்தும், மெதுவாக மழைநீர் மெல்ல வடியும் நிலையிலேயே உள்ளது.

மேற்கண்ட பகுதிகளில் இருந்து வடியும் தண்ணீர், செம்பாக்கம் ஏரிக்குச் செல்ல போதிய நீர்வழித்தடம் இல்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு விவசாய நிலமாக சிட்லபாக்கம் இருந்ததினால் விவசாய நிலங்கள் வழியாக ஏரிக்கு தண்ணீர் சென்று விடும். தற்போது குடியிருப்புகளாக மாறியதால் தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

தொடர்ந்து ஒவ்வொரு மழையிலும் சிட்லபாக்கம் பேரூராட்சியில் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்படுகிறது. இதனால் பொருட்சேதமும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதனைத் தடுக்க அரசு சார்பில் புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. சேலையூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், சிட்லபாக்கம் பகுதிக்குச் செல்லாமல் மாற்றுப்பாதையில் நேரடியாக செம்பாக்கம் ஏரிக்குச் செல்லும் வகையில் ரூ.96 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. சேலையூர் ஏரியில் இருந்து வேளச்சேரி சாலை வழியாக, 3.5 கிலோ மீட்டர் தூரம் சாலையின் உள்ளேயே கால்வாய் அமைத்து, இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்பட்சத்தில் சிட்லபாக்கம் மழை பாதிப்பில் இருந்து தப்பிக்கும். இந்த திட்டம் குறித்து பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சேலையூர் ஏரி நீர் சிட்லபாக்கம் பகுதியில் வரும் பாதையை சீர் செய்தாலே போதுமானது. அது செய்யப்படாததால் பேரூராட்சியில் 8 முதல், 12 வார்டு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இதற்காக சேலையூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், சிட்லபாக்கம் பகுதிக்கு வராமல் நேரடியாக செம்பாக்கம் ஏரிக்கு கொண்டும் செல்லும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

வேளச்சேரி சாலையில் ‘கட் அண்டு கவர்’ முறையில், 3.5 கிலோ மீட்டர் தூரம் கால்வாய் அமைக்க ரூ.96 கோடியில் மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 10 அடி ஆழம், 15 அடி அகலத்துக்கு அந்த பிரதான வடிகால் வடிவமைக்கப்பட்டு ராஜகீழ்பாக்கம், சேலையூர் ஏரிகளின் உபரிநீர், செம்பாக்கம் ஏரிக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அரசு அனுமதியும், நிதியும் ஒதுக்கும் பட்சத்தில், சிட்லபாக்கம் மழையில் பாதிக்கப்படுவது, 80 சதவீதம் குறையும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x