Published : 14 Nov 2017 12:23 PM
Last Updated : 14 Nov 2017 12:23 PM
திருநெல்வேலியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ஆடம்பரம், அதிக பொருட்செலவு, அரசுத்துறைகளின் சுறுசுறுப்பு என்று பல்வேறு அம்சங்களும் தென்பட்டன. ஆனால், விழாவில் பங்கேற்றவர்கள் மத்தியில் உள்ளார்ந்த எழுச்சியைப் பார்க்க முடியவில்லை.
தமிழகத்தில் மாவட்டங்கள்தோறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அதிக பொருட் செலவில் நடத்தப்படுகிறது. 23-வதாக திருநெல்வேலியில் இவ்விழா நேற்றுமுன்தினம் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், பெரும்பாலான அமைச்சர்கள் வருகையால் அத்தனை அரசுத்துறைகளும் கடந்த ஒருவாரத்துக்கு மேலாகவே சுறுசுறுப்புடன் விழா ஏற்பாடுகளில் அக்கறை செலுத்தின.
தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்திறங்கி அங்கிருந்து கார் மூலம் திருநெல்வேலி வண்ணார்பேட்டை அரசு விருந்தினர் மாளிகைக்கு முதல்வர் வந்தார். அவர் வரும் சாலையில் அவசர அவசரமாக சீரமைப்பு பணிகள் நடைபெற்றன.
கடந்த வாரத்தில் பாளையங்கோட்டையில் தொடர்ந்து மழை பெய்துவந்த நிலையில், விழா நடைபெற்ற இடத்தில் மணலை கொட்டி மேடாக்கி, எவ்வளவு மழை பெய்தாலும் விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் அரசுத்துறைகள் முடுக்கி விடப்பட்டன.
``முதல்வர் வருகை என்றதும், இவ்வளவு வேகமாக பணி செய்யும் அதிகாரிகளுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறோம். இனிவரும் நாட்களிலும் இதுபோன்ற சுறுசுறுப்புடன் பணியாற்ற மாவட்ட ஆட்சியரும், உயர் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சமூக ஆர்வலர் வழக்கறிஞர் மகேஷ் தெரிவித்தார்.
அனுமதியில்லை
தோட்டக்கலைத்துறை அரங்கில், சத்துணவு திட்டத்தை விளக்கும் வகையில் காய்கனிகளால் தத்ரூபமாக உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர். , பள்ளி குழந்தைகளின் உருவங்களை முதல்வரும், சக அமைச்சர்களும் வெகுவாக ரசித்தனர். இதுபோல் மலர்களால் உருவாக்கப்பட்ட நடனமாடும் பெண்கள் உருவமும் சிறப்பாகவே இருந்தது. ஆனால் இவற்றை பார்வையாளர்கள் பார்க்க முடியாதபடிக்கு கெடுபிடிகள் இருந்தன.
போலீஸாரிடம் மாற்றம்
காவல்துறையின் கெடுபிடி மக்களுக்கு பெரும் தலைவலியை உருவாக்கியிருந்தது. கடந்த சில மாதங்களுக்குமுன் இதே பகுதியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் கலந்துகொண்டபோது இதுபோன்ற கெடுபிடி இருக்கவில்லை.
வழக்கமாக எம்.ஜி.ஆர். பாடல்களை எந்த இடத்தில் பார்த்தாலும் அவரது விசுவாசிகள் கைகளை தட்டி ஆரவாரம் செய்து உற்சாகமடைவர். ஆனால் இந்த விழா மேடையில் பெரிய திரையில் அவற்றை ஒளிபரப்பியும் அரங்கில் எவ்வித சலனத்தையும் காண முடியவில்லை.
முதல்வரின் புகழ்பாடல்
எம்.ஜி.ஆரை குறித்த அம்சங்களை ஒளிபரப்பிய கையோடு ,20.11.2013-ல் முதல்வர் கே.பழனிசாமி குறித்து, ஜெயலலிதாவின் உரையை திரையில் ஒளிபரப்பினர்.
ஜெயலலிதாவே, பழனிசாமியை புகழ்ந்துள்ளார் என்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் முயற்சியாகவே இதை பார்க்கமுடிகிறது.
கடந்த காலங்களில் இதே பெல் பள்ளி மைதானத்தில் ஜெயலலிதா பங்கேற்று பேசிய தேர்தல் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்ட தொண்டர்களிடம் காணப்பட்ட உற்சாகத்தை தற்போது காணமுடியவில்லை. முதல்வரின் உரை மிகவும் நேர்த்தியாக பக்கம் பக்கமாய் தயாரிக்கப்பட்டிருந்தது. திருநெல்வேலியை குறித்த பல்வேறு சிறப்புகளெல்லாம் அதில் இடம்பெற்றிருந்தது. ஆனால் அவசர அவசரமாக அவற்றை முதல்வர் வாசித்துச் சென்றதால், அவர் கூறவந்த விவரங்களை பார்வையாளர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் எழுதி வைத்து வாசித்துவிட்டு சென்றார். முக்கிய பிரமுகர்களின் உரைகள் இவ்வாறு எழுதி வாசிக்கப்பட்டதால் பார்வையாளர் மத்தியில் சோபிக்கவில்லை.
தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் வெளியிட்டிருந்தால் இந்த விழா, மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றிருக்கும். விழாவுக்கு அழைத்துவரப்பட்ட ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு அந்த இடத்திலேயே நலத்திட்ட உதவிகளை வழங்காமல் இழுத்தடித்துது அலைக்கழித்ததும் வேதனையாக அமைந்தது. மொத்தத்தில் அதிக பொருட் செலவில் நடத்தப்பட்ட எம்ஜிஆர் நூற்றாண்டு விழா எழுச்சி இல்லாமல் முடிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT