Published : 16 Jul 2023 10:07 PM
Last Updated : 16 Jul 2023 10:07 PM

ஏழை - எளிய மக்களின் கல்விக்காக அக்கறையோடு செயல்பட்டு வரும் தம்பி: சூர்யாவை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகர் சூர்யா

சென்னை: ஏழை - எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்ந்த அக்கறையோடு தொடர்ச்சியாகச் செயல்பட்டு வரும் அன்புக்குரிய தம்பி சூர்யா அவர்களின் பங்களிப்பைப் பாராட்டுகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 16) முகாம் அலுவலகத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி “சத்தியதேவ்” நினைவாக சட்டம் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் “சத்தியதேவ் லா அகாடமி”-யை (Sathyadev Law Academy) தொடங்கி வைத்து, இலட்சினையை வெளியிட்டார்.

அரசு சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த அகாடமி தொடங்கப்பட்டுள்ளது. இதில் சட்ட நிபுணர்கள்/சட்ட ஆசிரியர்களைக் கொண்டு சட்டக்கல்லூரி பாடத்திட்டத்தின் அடிப்படையில், மாணவர்களுக்கு பாடங்களைக் காணொலியில் பதிவு செய்யப்பட்டு “யூ-டியூப்” வலைதளத்தில் பதிவேற்றப்படும். மாணவர்கள் அவற்றை கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து படித்து பயன் பெறலாம். பாடத்திட்ட காணொலி தயாரிப்பதற்கான நிதியை ஜெய்பீம் படத்தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யாவின் “2D எண்டர்டெயின்மெண்ட்” நிறுவனம் வழங்கிட உள்ளது.

“சமூகத்தில் கல்வியும் வேலைவாய்ப்பும் ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தமல்ல என்று போராடி சமூக நீதி (SocialJustice) அடிப்படையில் உரிமைகளைப் பெற்றோம். 1961-ஆம் ஆண்டு வழக்கறிஞர் சட்டம் இயற்றப்பட்ட பிறகும், இட ஒதுக்கீடு (Reservation) கொண்டுவரப்பட்ட பிறகுமே எளிய மக்களும் சட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எளிய பின்புலங்களில் இருந்து வரும் அவர்களது திறன்களை வளர்க்க, ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு அவர்களை இயக்குநராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்ய தேவ் லா அகாடமி-யைத் (Sathyadev Law Academy) தொடங்கி வைத்தேன்.

இதில், ஏழை - எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்ந்த அக்கறையோடு தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் அன்புக்குரிய தம்பி சூர்யா அவர்களின் பங்களிப்பைப் பாராட்டுகிறேன்.

சட்டத்தொழிலும் மருத்துவத் தொழிலும் மற்ற தொழில்கள் போல் அல்ல. மற்றவை பணி புரிவது, இவை பயிற்சி செய்வது!

எனவே, நான் முதல்வன் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு இந்த அகாடமியின் மூலம் பயிற்சி அளிக்கக் கேட்டுக் கொண்டுள்ளேன்.

நீதியரசர் சந்துரு அவர்களோடு, ஜெய் பீம் திரைப்படத்திற்குப் பிறகும் தொடர்ந்து சமூக அக்கறையோடு செயல்பட்டுவரும் தம்பி சூர்யா, இயக்குநர் த.செ.ஞானவேல் ஆகியோருக்கு மீண்டுமொருமுறை வாழ்த்துகள்!” என முதல்வர் ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x