Published : 16 Jul 2023 09:40 PM
Last Updated : 16 Jul 2023 09:40 PM
மதுரை: மதுரை மாவட்டம், எம்.கல்லுபட்டி போலீஸார் 16ம் தேதி அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதிகாலை 1 மணியளவில் மல்லப்புரம் விலக்கு அருகே சந்தேகத்திற்குரிய வகையில் நடந்து சென்ற சீல்நாயக்கன்பட்டி சங்கிலி மகன் வேடன் (30) என்பவரை விசாரணைக்கென காவல் நிலையத்திற்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அவர் மீது 106 என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து, பின்னர் அரை மணி நேரத்தில் சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.
வீட்டுக்குச் சென்று தூங்கிய அவரை காலையில் மனைவி பாண்டிச்செல்வி எழுப்பிய போது, அவர் எழுந்திருக்கவில்லை. போலீஸார் தாக்கியதால் அவர் உயிரிழந்தார் என அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் எழுமலை காவல் நிலையத்தில் திரண்டனர். அவரது மனைவி பாண்டிச்செல்வி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், 141 என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக முறையாக விசாரிக்க வேண்டும் என, உசிலம்பட்டி டிஎஸ்பிக்கு மாவட்ட எஸ்பி சிவபிரசாத் உத்தரவிட்டார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறியது: இவ்வழக்கில் வெளிப்படை தன்மையை கண்டறிய வேடன் உடற்கூராய்வு செய்ய போலீஸ் சார்பில், மருத்துவக்குழு ஏற்பாடு செய்யப்பட்டது. அவரது உடற்கூராய்வை வீடியோ பதிவு செய்துள்ளோம். பிரேத பரிசோதனைக்கு முன்பாக காவல் துறையின் முன்னிலையில், அவரின் உடலில் எவ்வித காயமும் இல்லை என, மனைவிக்கு காண்பித்து, அதுவும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.
வேடன் இருதய கோளாறு இருந்ததாகவும், இதன் காரணமாக அவர் உயிரிழக்க நேரிட்டது என, பிரேத பரிசோதனைக்கு பிறகு தெரிகிறது. இருப்பினும், மருத்துவக்குழுவினர் இறுதி அறிக்கையை பெற வேண்டியுள்ளது. மேலும், காவல் நிலையத்திலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, காவல்துறையினரால் அவருக்கு எவ்வித துன்புறுத்தல், தாக்குதல் செய்யப்படவில்லை என, உறுதி செய்யப்படுகிறது, என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT