Published : 16 Jul 2023 06:56 PM
Last Updated : 16 Jul 2023 06:56 PM
மதுரை: செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சாராக இருக்கச் செய்வதால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது: அண்ணாமலை என்று மதுரையில் நடந்த விழா ஒன்றில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார்.
மதுரை திருநகரில் காமராசர் மக்கள் கட்சி மாநிலப் பொதுக்குழு கூட்டம் மற்றும் காமராசர் பொற்கால ஆட்சி சாதனைகள் என்ற பெயரில் மலர் வெளியீட்டு விழா நடந்தது. மலர் வெளியீட்டு விழாவுக்கு மாநிலச் செயலர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். கலை, இலக்கிய பேரவை தலைவர் பாரி வரவேற்றார். முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் எம்.பி மலரை வெளியிட்டார்.
மலரை பெற்றுக்கொண்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: ''காமராசர் ஆட்சி காலத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. காலத்தால் வர்ணிக்க முடியாத வகையில் விவசாயம், பொதுப்பணி துறையில் கக்கன் அமைச்சராக பணிபுரிந்தார். கக்கன் போன்றவர் காமராசருடன் எப்படி எல்லாம் பணி புரிந்தார் என தெரிந்து கொள்ளவேண்டும். அரசியல் என்பது அடிப்படையில் மாறவேண்டும். எதற்காக அரிசியல் நடத்துகிறோம் எனப் புரியவேண்டும்.
முழு அரசியல்வாதிகளாக இருப்பவர்களால் தான் தவறு நடக்கிறது. நாம் கனவு காண்பதுபோல் அரசியல் மாறும். காமராசரின் கனவு மலரும். அரசியலில் நமக்கு நாமே சுய பரிசோதனை செய்யவேணடும். இது எதிர்காலத்தில் நடக்கும்.
காமராசருக்கும், மோடிக்கும் ஒற்றுமை உள்ளது: காமராசர் ஆட்சியில் தொழில் புரட்சி நடந்தது போன்று மோடி ஆட்சியிலும் தொழில் புரட்சி நடக்கிறது. இந்தியா தொழில் வளம் மிகுந்த நாடாக மாறுகிறது. அந்த வகையில் காமராசருக்கும், மோடிக்கும் இடையே ஒற்றுமை உள்ளது.
தமிழகத்தில், காமராசருக்கு நிகராக இல்லை என்றாலும், அவரது அமைச்சரவையில் இருந்தவர்கள் போன்று கூட தற்போதைய அமைச்சர்கள் இல்லை. தந்தை சாராய ஆலை நடத்துகிறார். மகனுக்கு தொழில்துறையில் அமைச்சர் பதவி. முரசொலி மாறன் போன்றவர்கள் இலாகா இல்லாத அமைச்சராக இருந்துள்ளனர். ஆனால் செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சாராக இருக்கச் செய்வதால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. அவருக்காக மொத்த அரசு நிர்வாகம் பின்னால் நிற்கிறது.
காமராசரின் வாழ்க்கை வரலாற்றைப் பார்க்கும்போது, நாமும் மாமனிதர் வாழ்ந்த மண்ணனில் வாழ்கிறோம் என பெருமைப்பட வேண்டும். 80 கோடி மக்கள் 33 வயதுக்கு கீழ் உள்ளனர். இவர்கள் கமராசர் பிறந்த 30 ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் காமராசரை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். காமராசர் ஐதராபாத், சுவிஸ் வங்கிகளில் இருப்புத் தொகை வைத்திருந்தார் என கருணாநிதி குற்றச்சாட்டினார். அவரை கேவலமாகப் பேசிவிட்டு, தற்போது அவரது பெயரை திமுக இன்று உச்சரிக்கிறது. தமிழ்நாட்டில் அவரது 9 ஆண்டு ஆட்சி காலத்தில் 18 ஆயிரம் பள்ளிகளை திறந்தார்.
2024-ல் மோடி வெற்றி பெறும்போது, இந்தியாவில் நாம் எதிர்பார்க்கும் உண்மையான அரசியல் மாற்றம் ஏற்படும். அரசியல் சுத்தப்படுத்தும் சூழல் உருவாகும். ஊழல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் இருந்து பாஜகவுக்கு அதிக எம்,பிக்களை கொடுக்கிறோமா என்ற கேள்வி உள்ளது. இந்த முறை தமிழ்நாட்டில் இருந்து 39 எம்.பிக்களை அனுப்பி நாடாளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும். மோடி என்ற ஆளுமை இருக்கும்போது, 39 எம்.பிகளை ஏன் அனுப்பி முடியாது. ஜி.கே. வாசன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை மந்திரிகளாக அமரவைக்க வேண்டும். எனது 3 ஆண்டுகால அரசியல் காகிதமாக உள்ளது. நான் இன்னும் ஞானம் பெறவேண்டும். இதை தலைவர்களிடம் கற்றுக் கொண்டிருக்கிறேன்.'' இவ்வாறு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...