Published : 16 Jul 2023 04:55 PM
Last Updated : 16 Jul 2023 04:55 PM

விழுப்புரம் சாலை விபத்தில் பலியான மூவரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்

சென்னை: விழுப்புரம் கீழ்புத்துப்பட்டியில் உள்ள சந்திப்பு சாலையில் நிகழ்ந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், விபத்தில் பலியான 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டம், சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில், கீழ்புத்துப்பட்டியில் உள்ள சந்திப்பு சாலையில் ஞாயிறு (ஜூலை 16) அதிகாலை 5 மணியளவில் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த கார் ஒன்று மீன் வாங்க காத்துக் கொண்டிருந்த புதுக்குப்பம் மீனவ பெண்கள் மீது மோதியதில் லட்சுமி (45) க/பெ. வல்லத்தான் மற்றும் கோவிந்தம்மாள் (50) க/பெ. கிருஷ்ணன் ஆகியோர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தனர் என்றும், திருமதி. கெங்கையம்மாள் (45) க/பெ. அஞ்சாபுலி என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நாயகம் (45) க/பெ. ராமலிங்கம், கேமலம் (46) க/பெ. மூர்த்தி, பிரேமா (45) க/பெ. நாகராஜ் ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய அறிவுறுத்தி உள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களுடைய உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், பலத்த காயமுற்ற நாயகத்துக்கு 1 லட்சம் ரூபாயும், லேசான காயத்துடன் சிகிச்சையில் உள்ள மற்ற இருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x