Published : 16 Jul 2023 04:13 PM
Last Updated : 16 Jul 2023 04:13 PM
கோவை: டிஐஜி விஜயகுமார் தற்கொலை விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை வெளியிட்ட 8 பேர் விசாரணைக்கு ஆஜராக கோவை போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்தவர் சி.விஜயகுமார். இவரது கட்டுப்பாட்டின் கீழ் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்கள் உள்ளன. ஜூலை 7 ஆம் தேதி காலை வழக்கம்போல் நடைப்பயிற்சிக்கு சென்றுவிட்டு காலை 6.50 மணிக்கு தனது முகாம் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் தனது பாதுகாவலர் ரவியிடம் இருந்த கைத்துப்பாக்கியை வாங்கி தனக்கு தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சத்தம் கேட்டு சக காவலர்கள் வந்து பார்த்தபோது டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.இதைத்தொடர்ந்து, டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு பணிச்சுமையோ, குடும்பப் பிரச்சினையோ காரணம் இல்லை என்றும், மருத்துவக் காரணங்களால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த தற்கொலை வழக்கு கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தற்கொலை விவகாரம் தொடர்பாக, மறைந்த காவல்துறை அதிகாரி விஜயகுமார் வீட்டுப் பணியாளர்கள், அருகில் வசிப்பவர்கள், அவருடன் பணியாற்றிய காவல்துறையினர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து அவதூறு பரப்பும் வகையில் யூடியூப், பேஃஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்து பதிவு செய்தவர்களிடம், எந்த ஆதாரத்தின் அடிப்படையில், அத்தகைய கருத்துகள் பதிவிடப்பட்டது, வேறு ஏதேனும் ஆதாரங்கள் உள்ளதா என்பது குறித்து விசாரிப்பதற்காக 8 பேருக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக மாநகர காவல் துறையினர் கூறும்போது,"கோவை சரக டி ஐ ஜி உயிரிழப்பு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரது உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு தரப்பினர் சில கருத்துக்களை பதிவு செய்தனர்.அதேபோல் சமூக வலைதளங்களில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளை சிலார் பதிவிட்டனர். இது தொடர்பாக ஏறத்தாழ ஒரு எட்டு பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் வரும் 18-ம் தேதி ராமநாதபுரம் போலீஸாரிடம் ஆஜராகி அந்த சம்பவம் தொடர்பாக தாங்கள் தெரிவித்த கருத்து குறித்து விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT