Published : 16 Jul 2023 05:30 AM
Last Updated : 16 Jul 2023 05:30 AM
சென்னை: வில்லங்க சான்றிதழை தானியங்கி முறையில் தயாரித்தல் உள்ளிட்ட நவீன அம்சங்களுடன் பதிவுத்துறையில் ‘ஸ்டார் 3.0’ திட்டம் அடுத்தாண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதியால், பதிவுத் துறையில் முன்னோடி திட்டமாக கடந்த 2000-ம் ஆண்டு பிப்.6-ம் தேதி முதல் ‘ஸ்டார்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்திட்டம் பல்வேறு பரிணாம வளர்ச்சிகள் அடைந்து கணினிமயமாக்கலில் பதிவுத்துறையை முன்னோடி துறையாகத் திகழ வைத்துள்ளது. தற்போது அனைத்து சேவைகளும் இணையதள அமைப்பிலான ‘ஸ்டார் 2.0’ திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, பதிவுத்துறையில் கணினிமயமாக்கல் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதன் அடிப்படையில் தற்போதுள்ள ‘ஸ்டார் 2.0’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சேவைகளில், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், பெருந்தரவு பகுப்பாய்வு முதலான மேம்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப உத்திகள் உட்புகுத்தப்படுகின்றன.
சான்றிட்ட நகல் மற்றும் வில்லங்க சான்றிதழ் முதலான சேவைகளை தானியங்கி முறையில் தன்னிச்சையாக தயாரித்தல் முதலான பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப திட்டங்களை செயல்படுத்தும் விதமாக ரூ.323.45 கோடி செலவில் ‘ஸ்டார் 3.0’ திட்டம் அடுத்தாண்டு முதல் அறிமுகப்படுத்துவது குறித்து, கடந்த ஜூலை 12-ல் தேதிஅரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை கண்காணிக்க தலைமை செயலரின் தலைமையில் மாநில அளவிலான குழுவும்,செயல்படுத்துவதற்காக பதிவுத்துறை தலைவர் தலைமையில் திட்டசெயலாக்க குழுவும் உருவாக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்துக்கென திட்ட ஒருங்கிணைப்பாளரை தேர்வுசெய்யவும் திட்ட ஆலோசகர்கள் இருவரை நியமிக்கவும், இத்திட்டத்தின் செயல்திறன், செயல்பாடு மற்றும் பாதுகாப்பு முதலானவற்றை தணிக்கை செய்ய மூன்றாம் தரப்பு தணிக்கையாளர்களை அடையாளம் காணவும் பதிவுத்துறை தலைவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முழுமையான வன்பொருள், மென்பொருள், பணியமைப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட உள்ள ‘ஸ்டார் 3.0’ திட்டமானது, பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கு எளிய, வெளிப்படையான பாதுகாப்பான மற்றும் துரிதமான மற்றும் உயர் தரத்திலான சேவைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT