Published : 16 Jul 2023 05:40 AM
Last Updated : 16 Jul 2023 05:40 AM
சென்னை: அகில இந்திய கலந்தாய்வு முடிவில் காலியாகவுள்ள எம்பிபிஎஸ்இடங்களை மாநிலங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் அனைத்து மாநிலசுகாதாரத்துறை அமைச்சர்களுடனான 15-வது சுகாதார மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்ற தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் தமிழக அரசின் 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தேசிய நலவாழ்வு குழுமஇயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
அந்த மனுவில் இடம்பெற்றுள்ள விவரம்: மருத்துவக் கல்வி சேர்க்கை கொள்கை மற்றும் தேசியதகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு(நீட்) தமிழக அரசு எதிர்ப்புதெரிவித்துள்ளது. கோயம்புத்தூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க வேண்டும்.
அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க வேண்டும். தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிய அரசுசெவிலியர் கல்லூரிகளை நிறுவ வேண்டும். மருத்துவ பட்ட மேற்படிப்பு கல்வி வரைவு ஒழுங்குமுறைவிதிகள், மருத்துவ படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு, தேசியமருத்துவ ஆணையத்தின் (மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களை நிறுவுதல், மதிப்பீடு மற்றும் மருத்துவக் கல்விக்கான இடங்களில் அதிகரிப்பு 2023) வரைவு ஆகியவற்றை கைவிட வேண்டும்.
துணை சுகாதார நிலையங்கள்: அகில இந்திய கலந்தாய்வு முடிவில் காலியாகவுள்ள எம்பிபிஎஸ் இடங்களை மாநிலங்களிடம் ஒப்படைக்க வேண்டும். 50 புதிய கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 50 புதிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 1,000 புதிய நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள், 1,000 புதிய கிராமப்புற துணை சுகாதார நிலையங்களை நிறுவ வேண்டும். சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கூடுதலாக 100 படுக்கைகள் கொண்ட கட்டிடம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு தமிழக அரசின் 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT