Published : 16 Jul 2023 04:22 AM
Last Updated : 16 Jul 2023 04:22 AM
மதுரை: நாட்டில் தரமான கல்வியை வழங்குவதில் இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகத்தை, முதலிடத்துக்குக் கொண்டுவர தொடர்ந்து உழைக்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். பின்னர், மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் பேசியதாவது: திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள் கல்வியும், சுகாதாரமும்தான்.
கலைஞர் நூற்றாண்டு தொடக்கமாக, கடந்த ஜூன் 15-ம் தேதி கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனையை சென்னை கிண்டியில் திறந்துவைத்தேன். தற்போது மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்துவைத்துள்ளேன்.
சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் நான் செய்வேன் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த இரு திட்டங்களும். அளிக்காத வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றியுள்ளோம்.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை என்றால், கலைநகர் மதுரை. அண்ணாவுக்கு நூற்றாண்டு நூலகத்தை சென்னையில் அமைத்து தந்தார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. தென் தமிழ்நாட்டின் அறிவாலயத்தை மதுரையில் நான் அமைத்திருக்கிறேன்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் நூலகம் அமைக்காமல், வேறு எங்கு அமைக்க முடியும்? மதுரையில் நீதிகேட்ட கண்ணகிக்கு, கருணாநிதி எழுதாத எழுத்தோவியங்கள் இல்லை.
திமுக தலைமைக் கழகத்தை உருவாக்கிய அண்ணா, அதற்கு அறிவகம் என்று பெயர் வைத்தார். ஆனால் அண்ணா அறிவாலயம் என்று பெயர் வைத்தவர் கருணாநிதி. இது அரசியல் இயக்கமல்ல, அறிவு இயக்கம்.
இந்த நூலகத்தை சிறப்பாக அமைக்க உதவிய அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஸை மட்டுமின்றி, கடுமையாக உழைத்த கடைக்கோடி மனிதர் வரை அனைவரையும் பாராட்டுகிறேன்.
பொதுவாக ஹெச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டார். மாணவர்களான நீங்கள் அவரைப் பார்க்க வேண்டும் என்பதற்காக, இந்த விழாவுக்கு அவரை அழைத்து வந்திருக்கிறேன். அவர் மிகப் பெரிய தொழிலதிபர் மட்டுமல்ல, இந்திய தொழிலதிபர்களில் அதிக நன்கொடை வழங்குபவர். ஏறத்தாழ 50 நாடுகளில், 2 லட்சம் பேர் இவரது நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். கிராமத்தில் பிறந்து, மாநகராட்சிப் பள்ளியில் படித்து, தொழில் தொடங்கி முன்னேறியவர் ஷிவ் நாடார்.
குழந்தைகள், மாணவர்கள், போட்டித் தேர்வர்கள், மாற்றுத் திறனாளிகள் பயனடையும் வகையில், 6 தளங்கள், 3.5 லட்சம் புத்தகங்கள் இந்த நூலகத்தில் இடம்பெற்றுள்ளன. உங்களை அன்போடு வரவேற்க, கருணாநிதி சிலையாகக் காத்துக்கொண்டிருக்கிறார்.
அவர் மாணவராக இருந்தபோது, கையெழுத்துப் பிரதி நடத்தினார். எழுத்து, இலக்கியம் என பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தார். அவர் எழுதிய புத்தகங்களை வைத்தாலே, அது பெரிய நூலகமாக அமையும். கருணாநிதி மாணவராக இருந்த காலத்தில் மொழிக்காகவும், இனத்துக்காகவும் போராடத் தொடங்கினார். 13 வயதில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றார். காமராஜர் பிறந்த நாளை, கல்வி வளர்ச்சி நாள் என அறிவித்தவர் கருணாநிதி. அந்த நாளில்தான் நூலகத்தைத் திறந்து வைத்திருக்கிறோம்.
நாட்டில் தரமானக் கல்வி வழங்குவதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடம் வருவதற்கு, அனைத்து வழிகளிலும் முயற்சிசெய்து, தொடர்ந்து உழைத்து வருகிறோம். மாதந்தோறும் புதுமைப் பெண் திட்டத்தில் ரூ.1,000 வழங்குகிறோம். செப்.15ல் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்தப் போகிறோம்.
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் அரசின் நோக்கம். மக்களுக்குத் தொண்டு செய்வதற்குத்தான் இந்த முதல்வர் பதவி என்று கருதுகிறேன். அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் என்ற ஒற்றை இலக்கோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அரசு உருவாக்கித் தரும் அனைத்து வாய்ப்புகளையும், நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். கலைஞர் சொன்னதைப்போல நானும் சொல்கிறேன், ‘புத்தகத்தில் உலகைப் படிப்போம்; உலகைப் புத்தகமாகப் படிப்போம்’. இவ்வாறு முதல்வர் பேசினார்.
நூலகக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட பணியாளர்களுக்கு, முதல்வர் நினைவுப் பரிசுகளை வழங்கினார். விழாவில், அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், சு.வெங்கடேசன் எம்.பி., கோ.தளபதி எம்எல்ஏ, ஹெச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார், தலைவர் ரோஷினி நாடார் பங்கேற்றனர். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வரவேற்றார். பொதுப்பணித் துறைச் செயலர் பி.சந்திரமோகன் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT