Last Updated : 14 Nov, 2017 09:48 AM

 

Published : 14 Nov 2017 09:48 AM
Last Updated : 14 Nov 2017 09:48 AM

15 வங்கி லாக்கர்கள் முடக்கம்: ரூ.1,430 கோடி வருமானத்துக்கு வரி செலுத்தாமல் மோசடி - வருமான வரித் துறை தகவல்

சசிகலா உறவினர்கள் வீடுகளில் கடந்த 5 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,430 கோடி வருமானத்துக்கு வரி செலுத்தாமல் மோசடி செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழகம், புதுச்சேரி, டெல்லி, பெங்களூரு நகரங்களில் 187 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் ரூ.7 கோடி ரொக்கம், ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ஏராளமான அசையா சொத்துகளின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15 வங்கி லாக்கர்கள் முடக்கப்பட்டுள்ளன. பல கிலோ தங்கம், வைர நகைகளை மதிப்பீடு செய்ய பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. சசிகலா குடும்பத்தினர் ஏராளமான போலி நிறுவனங்களை நடத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக வருமான வரித் துறை மூத்த அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது: சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.1,430 கோடி வருமானத்துக்கு வரி செலுத்தாமல் மோசடி செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பும் பணியை ஏற்கெனவே தொடங்கிவிட்டோம்.

முடக்கப்பட்ட 15 வங்கி லாக்கர்களை திறந்து சோதனை செய்யும்போது சொத்து மதிப்பு மேலும் அதிகரிக்கும். கைப்பற்றப்பட்ட சொத்து பத்திரங்களை ஆய்வு செய்து அவற்றை மதிப்பீடு செய்வது, சம்பந்தப்பட்டவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்வது, அதன்பேரில் நடவடிக்கை எடுப்பது ஆகிய பணிகள் படிப்படியாக நடைபெறும்.

அசையும் மற்றும் அசையா சொத்துகளின் ஆவணங்களை பரிசீலித்து அவற்றில் வரிஏய்ப்பு நடைபெற்றுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். பினாமி சொத்துகள் குறித்து அந்தந்த சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x