Last Updated : 16 Jul, 2023 03:29 AM

 

Published : 16 Jul 2023 03:29 AM
Last Updated : 16 Jul 2023 03:29 AM

33 நாட்களில் 26.65 அடி சரிந்த மேட்டூர் அணை நீர்மட்டம்: குறுவை சாகுபடியை சமாளிக்குமா நீர் இருப்பு?

மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாதது, மாதாந்திர பங்கீட்டு நீரை கர்நாடகா அரசு வழங்காதது உள்ளிட்டவற்றால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இதனால், தற்போது இருக்கும் நீர் இருப்பை கொண்டு குறுவை சாகுபடியை சமாளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கேரளம், கர்நாடக மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தமிழகத்துக்கு வரும் நீர், மேட்டூர் அணையில் தேக்கி வைக்கப்படுகிறது. இதன் மூலம் டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கும், 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அணைக்கு, நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 130 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 142 அடியாக அதிகரித்தது. டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் திறப்பை விட, நீர்வரத்து குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. தற்போது, அணையின் நீர்மட்டம் 76.70 அடியாகவும், நீர் இருப்பு 38.74 டிஎம்சியாகவும் உள்ளது.

அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறைந்துள்ளதால், நீர்மட்டம் கடந்த 33 நாட்களில் 26.65 அடி குறைந்துள்ளது. அதேபோல, 30.51 டிஎம்சி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. கடந்தாண்டு, ஜூன் 15-ம் தேதி அணையின் நீர்மட்டம் 116.57 அடியாகவும், நீர் இருப்பு 88.25 டிஎம்சியாகவும் இருந்தது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,17,349 கன அடியாகவும், நீர்வெளியேற்றம் 25 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு ஜூன் 12-ம் தேதி முதல் நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், வரும் ஜனவரி 28-ம் தேதி வரை நீர் திறப்பு நீடிக்க வேண்டும். தற்போது, குறுவை சாகுபடிக்கு மட்டுமே 125 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். இதில் மேட்டூர் அணையில் இருந்து 99.74 டிஎம்சி தண்ணீர் வழங்கப்படும். மீதமுள்ள 25.26 டிஎம்சி தண்ணீர் மழை மற்றும் நிலத்தடி நீர் மூலமாகவும் பூர்த்தி செய்யப்படும்.

அணையில் மீன் வளத்தை பாதுகாக்கவும், குடிநீர் தேவைக்காகவும் சுமார் 20 டிஎம்சி நீர் இருப்பு வைக்கப்படும். இந்நிலையில், அணையில் நீர் இருப்பு குறைந்து வரும் நிலையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை பெய்து, கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு உரிய நீர் திறக்கப்பட்டால் மட்டுமே, டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு உரிய காலம் வரை நீர் திறக்க முடியும் என்ற நிலை தற்போது நிலவுகிறது. இதனால் டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும், ஜூன், ஜூலை மாதங்களில் கர்நாடக அரசு சுமார் 40 டிஎம்சி நீர் வழங்க வேண்டும். ஆனால், கர்நாடக அரசு மாதாந்திர நீர் பங்கீட்டை வழங்கவில்லை. எனவே, காலம் தாழ்த்தாமல் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை தமிழக அரசு அணுகி வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கேரள, கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெரிய அளவில் பெய்யவில்லை. ஆனால் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், மேட்டூர் அணை நீர் இருப்பை பொறுத்து குறுவை சாகுபடிக்கு நீர் வழங்கப்படும். ஓரிரு வாரங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது, நீர்வரத்து அதிகரிக்கும் என நம்புகிறோம், என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x