Published : 15 Jul 2023 05:35 PM
Last Updated : 15 Jul 2023 05:35 PM

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

மதுரை: மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மதுரை - நத்தம் சாலையில் நவீன கட்டுமான அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடத்துக்காக மொத்தம் ரூ.215 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது. இதில் ரூ.60 கோடிக்கு புத்தகங்கள், ரூ.18 கோடிக்கு தளவாடப் பொருட்கள், புத்தகங்களை அடுக்கி வைக்கத் தேவையான ரேக்குகள் மற்றும் கட்டுமானத்துக்காக ரூ.130 கோடியும் செலவிடப்பட்டது.

இந்த பிரம்மாண்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். முன்னதாக, கலைஞர் நூற்றாண்டு நூலக வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், தரைத்தளம், அதனுடன் 6 தளங்களைக் கொண்டதாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடம், செய்தி - நாளிதழ் சேமிப்பு, நூல்கள் கட்டும் பிரிவு போன்றவை அமைந்துள்ளன. தரைத்தளத்தில் கலைக்கூடம், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவு, மாநாட்டு கூடம், ஓய்வறை, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, பல்வகை பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கை பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன.

முதல் தளத்தில் கலைஞர் பகுதி, குழந்தைகள் நூலகம், நாளிதழ்கள் - பருவ இதழ்கள் படிக்கும் பகுதி, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, அறிவியல் கருவிகள் பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன. இரண்டாம் தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவு, கலைஞரின் நூல்களைக் கொண்ட பிரிவு எனச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

மூன்றாவது தளத்தில் ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி இதழ்கள் உள்ளன. நான்காவது தளத்தில், எதிர்காலக் கனவுகளுடன் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணாக்கர் மற்றும் இளைஞர்களின் கனவு நனவாகும் வகையில் ஏறத்தாழ 30 ஆயிரம் புத்தகங்களுடனான பகுதி அமைக்கப்பட்டுள்ளது.

ஐந்தாவது தளத்தில் மின்னணுத் தொழில்நுட்பத்தின் வாயிலாக இன்றைய தலைமுறைக்குத் தேவையான அறிவுச் செல்வங்கள் அனைத்தையும் தருவதற்கான பகுதி உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆறாவது தளத்தில் நூல் பகுப்பாய்வு, நூல் பட்டியல் தயாரித்தல் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் சார்ந்த பகுதிகள் இடம்பெற்றுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x