Published : 15 Jul 2023 06:54 PM
Last Updated : 15 Jul 2023 06:54 PM
ஓசூர்: ஓசூர் உழவர் சந்தையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மஞ்சப்பை இயந்திரம் பயன்பாடின்றி காட்சிப் பெருளாக மாறியுள்ளது.
மனிதர்கள் மற்றும் கால்நடைகள், சுற்றுச்சூழலுக்கு மிகுந்த பாதிப்பை பிளாஸ்டிக் பயன்பாடு ஏற்படுத்தி வருகிறது. மக்காத தன்மையுள்ள பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் 50 மைக்ரானுக்கு குறைந்த பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு அரசு தடை விதித்தது. இதையடுத்து, பிளாஸ்டிக் பயன்பாட்டை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தொடர்ந்து, பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தானியங்கி இயந்திரம் மூலம் ரூ.10 செலுத்தி மஞ்சப்பை வழங்கும் திட்டத்தையும் அரசு அறிமுகம் செய்துள்ளது.
ஓசூரில் மாநகராட்சி சார்பில், உழவர் சந்தை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.10 செலுத்தி மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தை அறிமுகம் செய்தனர். அதன் தொடக்க விழா விமரிசையாக நடந்தது.
இந்நிலையில், ஓசூர் உழவர் சந்தையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு தாராளமாக உள்ளதால், அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் இயந்திரம் காட்சிப் பொருளாக இருந்து வருகிறது.
மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை வாடிக்கையாளர்களுக்கு விவசாயிகள் வழங்குவதால், நுகர்வோர் மஞ்சப்பை இயந்திரத்தைப் பயன்படுத்துவதில்லை.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ‘பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்; மீண்டும் மஞ்சப்பையைப் பயன்படுத்துவோம்’ என தமிழக அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக திட்டத்தை அறிமுகம் செய்தது.
ஆனால், திட்டம் பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. ஓசூர் மாநகராட்சியில் மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் பல லட்சம் செலவு செய்து விமரிசையாக அறிமுகப்படுத்தினர். ஆனால், அதை செயல்படுத்துவதில் அக்கறை காட்டாததால், காட்சிப் பொருளாக உள்ளது. மேலும், இயந்திரத்தில் மஞ்சள் பையும் வைப்பதில்லை. இதனால் உழவர் சந்தையில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இதைத் தடுக்க உழவர் சந்தையில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், மஞ்சப்பை இயந்திரத்தை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT