Last Updated : 15 Jul, 2023 04:14 PM

 

Published : 15 Jul 2023 04:14 PM
Last Updated : 15 Jul 2023 04:14 PM

டாப் 10-ல் 8-ம் இடத்தில் விழுப்புரம் ரயில் நிலையம்: என்னென்ன தேவை? - ஓர் அலசல் ரிப்போர்ட்

தமிழகத்தில், தரவரிசையின் அடிப்படையில் டாப் 10 ரயில் நிலையங்களில் முதலிடத்தை சேலம் பிடித்திருக்கிறது. அடுத்து மதுரை, தொடர்ந்து சென்னை சென்ட்ரல், கோவை, சென்னை எழும்பூர், திருச்சி, ஈரோடு என வருகின்றன. 8-ம் இடத்தில் நமது விழுப்புரம் ரயில் நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இந்தப் பட்டியலில் ஜோலார்பேட்டை, திருநெல்வேலி என அறிவிக்கபட்டுள்ளது. டாப் 10-ல் 8-ம் இடத்தில் இருந்தாலும், தமிழகத்தின் மிகமிக முக்கியமான சந்திப்பு பகுதியாக விழுப்புரம் ரயில் நிலையம் திகழ்கிறது.

தென்மாவட்டங்களை நோக்கிச் செல்லும் பெரும்பாலான ரயில்கள் விழுப்புரம் ரயில் நிலையத்தை கடந்தே செல்கின்றன. கேரளா மற்றும் வடமாநிலங்களை இணைக்கும் ஆந்திரம், கர்நாடகம் செல்லும் ரயில்களும் விழுப்புரம் ரயில் நிலையம் வந்து செல்கின்றன.

மொத்தம் 117 ரயில்கள், விழுப்புரம் ரயில் நிலையம் வழியாக சென்று வருகின்றன. இவற்றில் திருப்பதி, புருலியா, கரக்பூர் உள்ளிட்ட 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள், புதுச்சேரி, தாம்பரம், மயிலாடுதுறை, மதுரை, சென்னை எழும்பூர், மேல்மருவத்தூர், காட்பாடி உள்ளிட்ட பயணிகள் ரயில்கள் என 14 ரயில்கள் விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்தே புறப்பட்டுச் செல்கின்றன.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த ரயில் நிலையம் மூலம், தற்போது நாள் ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வரை வருவாய் கிடைக்கிறது. இங்கு 6 நடைமேடைகள் உள்ளன. குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் 35 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

எந்நேரமும் பரபரப்பாகவும், பயணிகள் கூட்டம் மிகுந்தும் விழுப்புரம் ரயில் நிலையம் காணப்படுகிறது. விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு அருகிலேயே முண்டியம்பாக்கத்தில் கூட்ஸ் ரயில்கள் வந்து பொருட்களை ஏற்றி, இறக்கும் முனையமும் அமைந்துள்ளதால், கூட்ஸ் ரயில்களும் விழுப்புரம் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.

விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு அதிகளவில் ரயில்கள் வந்து செல்வதால் சில சமயங்களில் ரயில்களை நிறுத்த இடம் கிடைக்காமல் பல ரயில்கள், நிலையத்துக்கு வெளியே சற்றே காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ரயில் நிலையத்தின் வசதிகளை கேட்டால் அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை. இங்குள்ள பிளாட்பாரங்களின் எண்ணிக்கை 6. இந்த 6 நடை மேடைகளிலும் போதிய அளவில் இருக்கை வசதிகள் செய்து தரப்படவில்லை. அனைத்து நடை மேடைகளிலும் முழுமையாக மேற்கூரை வசதிகள் செய்யப்படவில்லை.

சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த ரயில் நிலையம் எவ்வாறு பேணப்பட்டு வருகிறது என்பதை, ரயில் நிலைய சுவர்களில் காணப்படும் சுவரொட்டிகள், விளம்பரங்களே நமக்கு உணர்த்துகிறது. பயணச்சீட்டு எடுக்கும் மையத்தில் போதிய இடவசதி இல்லை.

ஒவ்வொரு நடைமேடையிலும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ள போதிலும் சில சமயங்களில் குடிநீர் குழாயில் இருந்து வெறும் காற்று மட்டுமே வருகிறது. பயணிகளின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் ஒன்று உள்ளது. கடந்த சில வருடங்களாகவே அது பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது.

ரயில் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீருற்று பழுதடைந்து பல ஆண்டுகளாக காட்சிப் பொருளாகவே இருக்கிறது. ரயில் நிலைய வளாகத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மேற்கூரை வசதிகள் இல்லாததால் அங்கு நிறுத்தப்படுகிற இருசக்கர வாகனங்கள் அனைத்தும் கொளுத்தும் வெயிலில் காய்ந்து வருகின்றன. இவ்வாறாக விழுப்புரம் ரயில் நிலையத்தின் குறைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. ரயில் நிலையத்தை பார்வையிட நாம் சென்ற போது, அங்கு காத்திருந்த பயணிகள் சிலரிடம் பேசினோம்.

“முதலாவது நடைமேடையில் மட்டுமே பயணிகள் காத்திருக்கும் அறை உள்ளது. மற்ற நடைமேடைகளில் பயணிகள் காத்திருக்கும் அறை இல்லை. விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் இருந்து ரயில் நிலையத்துக்கு செல்லும் பகுதியில் முகப்பு வழியே தெரியாமல் உள்ளது.

முறையான முகப்பு வழியை ஏற்படுத்த வேண்டும். பிற ரயில் நிலையங்களின் முகப்பு மின்விளக்குகளால் பளிச்சிடுகின்றன. இங்கு அப்படி இல்லை. நடைமேடைகளில் எந்தெந்த ரயில்கள் பெட்டிகள் எங்கெங்கு வந்து நிற்கும் என்பதை பயணிகள் எளிதாக அறிந்து கொள்வதற்கு வசதியாக மின்னணு திரை அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், முதல் நடைமேடையில் உள்ள மின்னணு திரைகள் மட்டுமே இயங்குகிறது. மற்ற நடைமேடைகளில் மின்னணு திரைகள் பழுதாகி பல மாதங்கள் ஆகின்றன. வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக கொண்டு வரப்பட்ட பேட்டரி காரில் பயணிக்க பயணி ஒருவருக்கு ரூ. 20 வசூலிக்கப்படுகிறது. இதனை ரயில்வே நிர்வாகம் இலவசமாக செய்து கொடுக்க வேண்டும்.

ரயில் நிலைய 2, 3 நடைமேடைகளிலும், 4, 5 நடைமேடைகளிலும் பயணிகளின் வசதிக்காக லிப்ட் அமைப்பதற்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நகரும் படிக்கட்டுகள் வசதி அமைத்தாலும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முக்கியமாக போதிய கழிப்பறைகள் இல்லை. இருக்கின்ற கழிப்பறைகளையும் முறையாக பராமரிப்பதில்லை. கூடுதலாக கழிப்பறை வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும்.

ரயில் நிலைய 2, 3-வது நடைமேடைகளில் டீ ஸ்டால்கள் குறைவாக உள்ளன. ரயில்கள் வரும் பெரும்பாலான சமயங்களில் நடைமேடைகளில் உள்ள குடிநீர் குழாய்களில் 24 மணி நேரமும் குடிநீர் தடையின்றி வருவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அதுபோல் நடைமேடைகளில் பயணிகள் அமர போதிய இருக்கை வசதி, போதுமான மின்விசிறிகளுடன் அமைக்கப்பட வேண்டும். நள்ளிரவு 1.30 மணிக்கு திருச்சி மார்க்கமாக மலைக்கோட்டை விரைவு ரயில் செல்கிறது.

அதற்கு பிறகு மறுநாள் காலை 11 மணிக்குத்தான் குருவாயூர் விரைவு ரயில் உள்ளது. இதற்கு இடைப்பட்ட 10 மணி நேரத்தில் திருச்சி மார்க்கத்துக்கு எந்தவொரு ரயிலும்இயக்கப்படுவதில்லை. இதற்கு முன்பு விழுப்புரத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு திருச்சிக்கு சென்று வந்த பயணிகள் ரயிலை நிறுத்தி 6 ஆண்டுகள் ஆகின்றன. நாங்களும் மனு கொடுத்து சலித்து விட்டோம்” என்று அங்கிருந்த பயணிகள் கூறினர்.

‘தமிழகத்தின் இதயப் பகுதியாக திகழ்ந்து வரும் விழுப்புரம் சந்திப்பு ரயில் நிலையத்தை முறையாக பராமரிப்பது மிகமிக அவசியம்’ என்ற நம் கருத்தையே பயணிகள் ஒருசேர தெரிவிக்கின்றனர். “ஒவ்வொரு முறை கேரள மாநிலத்துக்குள் செல்லும் போதும், இதை விட வருவாய் குறைவாக உள்ள, குறைந்த அளவு ரயில்கள் வந்து செல்லும் ரயில் நிலையங்களைப் பார்க்கும் போது ஏக்கமாக இருக்கிறது.

‘இரண்டு மாநிலங்களும் தென்னக ரயில்வேயின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. ஆனால், அங்கு மட்டும் அவ்வளவு அழகான ரயில் நிலையங்கள் இருக்கின்றன. தேவைகள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு, சரி செய்யப்படுகின்றன. இங்கு மட்டும் ஏன் இப்படி அலட்சியம் காட்டப்படுகிறது?” இந்தக் கேள்வி ரயில் சிநேகர்கள் பலருக்கு எழுவதுண்டு. இதே கேள்வியை தென்னக ரயில்வே அதிகாரிகளும் தங்களுக்குள் எழுப்பி, சிறப்பான முறையில் சீராக்க களமிறங்கினால் விழி மா நகரத்தின் ரயில் நிலையமும் விழிப்படையும்.

புதுச்சேரிக்கான ரயிலை கூடுதலாக இயக்க வேண்டும்: “நான் விழுப்புரத்தில் இருந்து நாள்தோறும் புதுச்சேரிக்கு வேலைக்குச் சென்று வருகிறேன். புதுச்சேரி - விழுப்புரம் இடையே பயணிகள் ரயில் நாள் ஒன்றுக்கு 3 முறை மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த ரயிலை குறிப்பிட்ட இடைவெளியில், மேலும் 3 முறை இயக்கினால் என்னைப் போன்றவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.

விழுப்புரம் - புதுச்சேரி இடையிலான இருப்பு பாதையில் பெரும்பாலான நேரங்களில் ரயில்கள் வருவதில்லை. அதனால் இந்த இருப்பு பாதையில் கூடுதலாக 3 முறை இயக்குவதில் எந்தச் சிக்கலும் இல்லை. இதன் மூலம் விழுப்புரம் - புதுச்சேரி இடையே பேருந்துகளில் பிதுங்கி வழியும் கூட்டம் சற்றே குறையும்” என்று கூறுகிறார் விழுப்புரம் அருகில் உள்ள காணை பகுதியைச் சேர்ந்த மணி என்பவர்.

எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை: “தென்னக ரயில்வேயில் சேலம் கோட்டம் தனியே உருவானதும், வளர்ச்சியான அடுத்தடுத்த மாற்றங்கள் தமிழகத்தின் பல்வேறு ரயில் நிலையங்களில் நடக்க, விழுப்புரம் ரயில் நிலையமும் பொலிவு பெறும் என நம்பினோம்.

அடுத்தடுத்து, ஆட்சிகளும் காட்சிகளும் மாற, இந்த ரயில் நிலையத்தை அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். நம்ம ஊர் ரயில் நிலையம் நன்றாக இருக்க வேண்டும் என்ற அக்கறையில் எத்தனை எத்தனை முறையோ மண்டல மேலாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் மனுக்கள் அனுப்பி ஓய்ந்து விட்டோம். எதுவும் நடக்கவிலலை.” என்கிறார் ரயில் பயணிகள் சங்க செயலாளர் தனபால்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x