Published : 15 Jul 2023 02:52 PM
Last Updated : 15 Jul 2023 02:52 PM

அனைத்து மாவட்டங்களும், அனைத்து வளர்ச்சியையும் எட்டுவதுதான் அரசின் இலக்கு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

காணொலிக் காட்சியின் வழியாக திறந்து வைத்த முதல்வர்

சென்னை: அனைத்து மாவட்டங்களும், அனைத்து வளர்ச்சியையும் எட்டுவதுதான் அரசின் இலக்கு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுரை, வடபழஞ்சியில் பின்னக்கிள் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். மதுரை வடபழஞ்சியில் எல்கோசெஸ்ஸில் உள்ள பின்னக்கிள் இன்பொடெக் சொலுயுசன்ஸ் நிறுவனத்திற்கு தமிழ்நாடு மின்னணு நிறுவனம் 34.09 ஏக்கர் நிலத்தை ஏற்கனவே ஒதுக்கீடு செய்தது. இதனையடுத்து, பின்னக்கிள் இன்பொடெக் சொல்யூஷன்ஸ் நிறுவனம் முதற்கட்டமாக 1,80,000 சதுர அடி பரப்பளவில் ரூ.120 கோடி முதலீட்டில் கட்டுமானப் பணிகளை முடித்து 950 பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பினை அளித்துள்ளது.

இந்த அதிநவீன தகவல் தொழில்நுட்ப கட்டிடம், மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த திறமையான இளைஞர்களுக்கு 2026 ஆம் ஆண்டுக்குள் சுமார் 6,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பின்னக்கிள் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தை திறந்து வைத்துப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், "பின்னக்கிள் நிறுவனத்தின் மிகப்பெரிய Global Engineering Centre of Excellence-யை மதுரை, வடபழஞ்சியில் திறந்து வைப்பதில் பெருமையடைகிறேன். தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மதுரை வடபழஞ்சியில் 245.17 ஏக்கர் பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவை அமைத்துள்ளது. இதில் 120 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 1,80,000 சதுர அடி பரப்பளவில் 950 பணியாளர்களுக்கு பணி வாய்ப்பினை அளித்து, உலகத்தரம் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப மையத்தை பின்னக்கிள் நிறுவனம் அமைத்துள்ளது. இது இந்தியாவில் அமையும் நான்காவது Global Delivery Centre ஆகும்.

3டி மாடலிங், கட்டட மேலாண்மை, MEP டிசைன், Value Engineering, Scan to BIM உள்ளிட்ட பல சேவைகளை அளிப்பதாக இது அமைந்துள்ளது. இத்தகைய தனித்துவம் வாய்ந்த சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த பின்னக்கிள் நிறுவனத்தின் மையம் மூலமாக 6,000 பேருக்கு, குறிப்பாக தென்மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருப்பது எனக்கு மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது. நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பின், பொருளாதாரத்தை வளர்க்கவும், தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரவும், தொழில்துறையில் அதிக அக்கறையும், கவனமும் செலுத்தி வருவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நம்முடைய இலக்கு என்பது தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியை பெருக்கி, அனைத்து மாவட்டங்களும், அனைத்து வளர்ச்சியையும் அடைந்தது என்ற நிலையை எட்டுவதுதான். எங்களுடைய இந்த இலக்கை அடைய உதவிடும் வகையில் பின்னக்கிள் போன்ற நிறுவனங்கள் இன்னும் பிற தென் மாவட்டங்களில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை என்னுடைய வேண்டுகோளாக இந்த தருணத்தில் வைக்கிறேன்.

ஐடி என்றாலே கருணாநிதி தான். அந்த அளவுக்கு தகவல் தொழில்நுட்ப துறை வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றிக் காட்டியவர் கருணாநிதி. இந்தியாவிலேயே முதன்முதலாக 1997ம் ஆண்டே தகவல் தொழில்நுட்ப கொள்கையை உருவாக்கி, தமிழகத்தின் ஐடி புரட்சிக்கு வித்திட்டவர் கருணாநிதி. சென்னையில் டைடல் பூங்காவை அமைத்து இன்று ராஜீவ் காந்தி சாலை என அழைக்கப்படும் OMR சாலையை தகவல் தொழில்நுட்ப தாழ்வாரமாக வழிவகுத்தார். எதிர்காலம் என்பது டிஜிட்டல் காலம் என்பதை முன்கூட்டியே உணர்ந்து, தமிழகத்திலுள்ள மாணவர்கள் கணினி பயில்வதை ஊக்குவித்தார். அவர்கள் மென்பொருள் துறையில் சிறந்து விளங்குவதற்குக் காரணமானார்.

இன்று தமிழகத்தில் வீதிதோறும் பொறியியல் பட்டதாரிகள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் தான் நவீன தமிழகத்தின் சிற்பியான கருணாநிதி. அத்தகைய தலைவர் கருணாநிதி நூற்றாண்டில் மதுரையில் அமையும் இந்த பின்னக்கிள் நிறுவன மையம் தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன். இதுபோன்ற வளர்ச்சியை விரைவுப்படுத்தி அதன் பயனை எல்லாருக்கும் கொண்டு சேர்ப்பதை நமது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் மெய்ப்பித்து காட்டுவார் என நான் நம்புகிறேன். இந்த சிறப்பான முன்னெடுப்பை நிகழ்த்தி காட்டியிருக்கும் பின்னக்கிள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் வாழ்த்துகள்" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x