Published : 15 Jul 2023 11:33 AM
Last Updated : 15 Jul 2023 11:33 AM

''பொது சிவில் சட்டம் அரசியலமைப்பை சீர்குலைத்துவிடும்'' - சட்ட ஆணையத்திற்கு வைகோ கடிதம்

வைகோ | கோப்புப் படம்

சென்னை: அரசியலமைப்பைச் சீர்குலைக்கும் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று இந்திய சட்ட ஆணையத்தின் தலைவருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

இந்தக் கடிதத்தின் விவரம்: இந்தியாவில் பொது சிவில் சட்ட தனிநபர் மசோதாவை டாக்டர் கிரோடிலால் மீனா அறிமுகப்படுத்தியதை எதிர்த்து, 09.12.2022 அன்று, மாநிலங்களவையில் நான் பேசும் போது, "ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் தங்களது செயல் திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக செயல்படுத்தி வருகின்றனர். காஷ்மீரை முடித்துவிட்டார்கள். இப்போது அவர்கள் பொது சிவில் சட்ட மசோதாவைக் கொண்டு வந்துள்ளனர். அப்படியானால், நாம் எங்கே செல்கிறோம்? பேரழிவை நோக்கியும், சிதைவை நோக்கியும் இந்தியாவை இட்டுச் செல்கின்றனர். இச்சட்டம் வந்தால் சிறுபான்மை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அவர்களின் உணர்வுகள் முற்றிலும் அழிந்துவிடும்.

எனவே, தயவு செய்து இந்த மசோதாவை இன்று அறிமுகப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். பெரும்பான்மை கிடைக்காது என்பதால், கடந்த முறை கைவிட்டுவிட்டார்கள். இந்த முறை அவர்களுக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. எனவே, தற்போது திணிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் இது இந்தியாவிற்கு பேரழிவை ஏற்படுத்த வழிவகுக்கும். இது அவமானகரமான துக்க நாள். நான் மிகவும் வருந்துகிறேன். இந்த மசோதா அறிமுகம் ஆகாமல் தடுக்க வேண்டும்" என்று கூறி என் கருத்தை பதிவு செய்திருந்தேன்.

பிஜேபி. ஆட்சிக்கு மீண்டும் வந்ததன் விளைவாக, 21-வது இந்திய சட்ட ஆணையம் நீதியரசர் பி.எஸ். சௌகான் தலைமையில் அமைக்கப்பட்டது. அது பொது சிவில் சட்டம் குறித்து ஆய்வு செய்தது. பொது சிவில் சட்டம் குறித்த கேள்விகளை முன்வைத்து, அதில் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் கருத்துகளையும் அது கோரியிருந்தது.

அவ்வாறு பெறப்பட்ட பதில்களின் அடிப்படையில் 21ம் சட்ட ஆணையம் “குடும்ப சட்டங்களின் சீர்திருத்தம்“ என்ற தலைப்பில் 2018 ஆகஸ்ட் மாதத்தில் ஆலோசனைக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அந்த ஆலோசனை அறிக்கையில், "பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் நாட்டில் நிலவும் பன்முகத்தன்மைக்கு மதச்சார்பின்மை முரண்பட முடியாது. நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மை என்பதை பொது சிவில் சட்டம் மூலம் சமரசம் செய்ய முடியாது. மேலும் நாட்டில் பொது சிவில் சட்டம் அவசியம் இல்லை. தற்போதைய சூழலில் அது விரும்பத்தக்கதும் அல்ல" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த கட்டுரை வெளியாகி 3 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், 22வது சட்ட ஆணையம் ஜூன்-14, 2023 அன்று வெளியிட்ட அறிவிப்பில், பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்கள், மத அமைப்புகள் கருத்துகள் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளது. ஜூன்-27ம் தேதி, மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் பாஜக உறுப்பினர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றும் போது, “ஒரே குடும்பத்துக்கு இரண்டு வெவ்வேறு விதமான சட்டத்திட்டங்கள் எப்படிப் பொருந்தும்? அதேபோல் ஒரு தேசம் இரண்டுவிதமான சட்டங்களைக் கொண்டு இயங்க முடியாது. உச்சநீதிமன்றமும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த கூறியுள்ள நிலையில், பொது சிவில் சட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும்“ என அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்தியாவில் குற்றவியல் சட்டங்களும், தண்டனைச் சட்டங்களும் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால் உரிமையியல் சட்டங்கள் எனப்படும் சிவில் சட்டங்கள் மட்டும் சாதி, மத, இன ரீதியாக கலாசாரத்திற்கேற்ப மாறுபடும். முஸ்லிம்கள் மட்டுமல்ல, சீக்கியர்கள், ஜெயின்கள் என்று ஒருவர் சார்ந்துள்ள மதத்திற்கேற்ப சிவில் சட்டங்கள் மாறுபடுகின்றன. இந்து மதத்திலும் இந்துக்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தால் வரிச்சலுகைகள் உண்டு. இந்துக்கள் குழந்தைகளைத் தத்தெடுக்கவும், ஜீவனாம்சம் பெறவும் தனி சட்டங்கள் உண்டு.

பொது சிவில் சட்டம், தனிநபர் உரிமையான எந்த மதத்தையும் பின்பற்றுதல், வாரிசுரிமை, தத்தெடுத்தல் போன்றவற்றில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 25 வழங்கியுள்ள உரிமைகளைப் பறிப்பதற்கும், பிரிவு-29 வழங்கியுள்ள சிறுபான்மையினருக்கான உரிமைகளைப் பறிப்பதற்குமான முயற்சியாகும். அரசமைப்புச் சட்டப் பிரிவு 44 குறிப்பிடும் பொது சிவில் சட்டம், பொதுவான மதம் சாராத பல்வேறு சமூகச் செயல்களுக்கு, குறிப்பாக இரு நபரிடையே ஒப்பந்தங்கள், சொத்துப் பரிமாற்றத்துக்கான சட்டங்கள், பணப் பரிமாற்ற ஆவணங்கள், கருவிகள் குறித்த சட்டங்களை இயற்றுவதற்கான அதிகாரத்தை வழங்குகிறதே தவிர, மத வழக்கங்களுக்கானதல்ல.

பொது சிவில் சட்டத்தை திணிப்பதற்கான எந்தவொரு முயற்சியும் மத விஷயங்களில் அரசின் முரண்பாடாக கருதப்படலாம், மேலும் பல்வேறு மத சமூகங்களுக்கிடையில் ஆழமான பிளவுகளையும் சமூக அமைதியின்மையையும் உருவாக்கும் முயற்சியாகவும் கருதப்படும். அரசியலமைப்புச் சீர்குலைவை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் பன்முகத் தன்மைக்கு எதிரான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x