Published : 15 Jul 2023 10:10 AM
Last Updated : 15 Jul 2023 10:10 AM

காமராஜரின் 121வது பிறந்தநாள் விழா - விருதுநகர் மணிமண்டபத்தில் அமைச்சர்கள், தலைவர்கள் மரியாதை

விருதுநகர்: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் 121ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த விருதுநகரில் அமைக்கப்பட்டுள்ள நூற்றாண்டு மணிமண்டபத்தில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அமைச்சர்கள் மரியாதை: விருதுநகரில் பிறந்த காமராஜரின் வீடு, நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. அதோடு, காமராஜரின் நூற்றாண்டு மணிமண்டபமும் விருதுநகரில் அமைக்கப்பட்டுள்ளது. காமராஜரின் 121வது பிறந்த தினத்தை முன்னிட்டு, காமராஜரின் நூற்றாண்டு மணிமண்டபத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், சிவகாசி மேயர் சங்கீதா, விருதுநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன், சாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் உள்ளிட்டோர் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நோட்டு புத்தகங்கள் காணிக்கை: விருதுநகரில் உள்ள காமராஜரின் இல்லத்தில், கைத்தறி சங்கம் சார்பில் நூற்பு வேள்வி நடைபெற்றது. மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காமராஜரின் இல்லத்திற்கு வருகை தந்த நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நோட்டு புத்தகங்களைக் கொண்டு வந்து காணிக்கையாக அளித்து காமராஜருக்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் காமராஜர் நாடார் மகாஜன சங்கம் சார்பில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. காமராஜர் பிறந்த பிறந்த ஊரில் அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருவதால் விருதுநகரே விழாக்கோலம் பூண்டுள்ளது.

காமராஜர் வரலாறு: பெருந்தலைவர் என்றும் கிங் மேக்கர் என்றும் கல்விக் கண் திறந்தவர் என்றும் போற்றப்படும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் 121வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி தினமாக தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. விருதுநகரில் குமாரசாமி நாடார் - சிவகாமி அம்மாள் தம்பதியருக்கு 1903 ஜூலை 15ஆம் தேதி பிறந்தவர் காமராஜர். எளிய குடும்பத்தில் பிறந்த அவர், 6 வயதுச் சிறுவனாக இருந்தபோதே தந்தையை இழந்தார். 6ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே பள்ளி செல்வதை நிறுத்த வேண்டிய நிலைமைக்கு ஆளானார். தன் முழு நேரத்தையும் நாட்டுப் பணிக்கு அர்ப்பணிப்பதற்காகத் திருமணம் செய்து கொள்ளவும் மறுத்தவர்.

பல்கலைக்கழகப் படிப்போ, பட்டமோ பெறாதிருந்தும், தனிப்பட்ட முறையில் ஏராளமான நூல்களைப் படித்து உலக அறிவை வளர்த்துக் கொண்டார். இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு பல முறை சிறை சென்ற காமராஜர், நாட்டின் விடுதலைக்காக 9 ஆண்டுகள் சிறையிலிருந்தார். 1936இல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலராகவும், 1940 முதல் 1954 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும், 1947இல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும், 1949இல் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினராகவும், 1963 முதல் 1967 வரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் செயல்பட்டவர்.

1941ல் விருதுநகர் நகராட்சி தலைவராகவும், 1946இல் சட்டமன்ற உறுப்பினராகவும், 1952இல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 1954 முதல் 1963வரை தமிழக முதல்வராகவும், 1969 மற்றும் 1971இல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தவர். காமராஜர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோது, பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அனைவருக்கும் 11ம் வகுப்பு வரை இலவசக் கல்வி அளித்தார். நாட்டின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவின் மறைவுக்குப் பிறகு இந்தியாவின் பிரதமரை இருமுறை தேர்ந்தெடுப்பதில் முக்கிய வங்கு வகித்தவர் காமராஜர். அதனால் அவர் கிங் மேக்கர் என அழைக்கப்பட்டார். 1972ல் தாமிர பத்திர விருதும், 1976ல் பாரத ரத்னா விருதும் பெற்றவர். காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2ம் நாளில் 1975ல் காமராஜர் உயிரிழந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x