Published : 15 Jul 2023 05:07 AM
Last Updated : 15 Jul 2023 05:07 AM

பொது சிவில் சட்டம், தமிழகம் புறக்கணிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப முடிவு - திமுக எம்பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக திமுக எம்.பி.,-க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்:எஸ்.சத்தியசீலன்

சென்னை: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இம்மாதம் 20-ம் தேதி தொடங்க உள்ளது. இக்கூட்டத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும், மக்கள் பிரச்சினைகள் எழுப்ப வேண்டிய விதம் குறித்த ஆலோசனை மேற்கொள்வதற்காக திமுக மக்களவை, மாநிலங்களவை எம்பிக்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட துணைப் பொதுச்செயலாளர்கள், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் எம்பி.க்கள் பங்கேற்றனர். தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

மக்களுக்கு வேதனை: கடந்த 9 ஆண்டு பாஜக அரசால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வேதனைகளை, தமிழகத்தை, தமிழக மக்களை புறக்கணித்து ஏமாற்றியதை நாடாளுமன்றக் கூட்டத்தில் உரக்க குரலெழுப்புவோம். கூட்டுறவு, கூட்டாட்சி எனக் கூறிவிட்டு, மாநில அரசுகளை நகராட்சிகளாக ஆக்கத் துடிப்பது, எல்ஐசி, ஏர் இண்டியா வரையிலான பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதில் ஆர்வம் காட்டுவது, மணிப்பூர் மாநிலம் பற்றி எரியும்போது உலகத்தை சுற்றி அறிவுரை கூறுவது, அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை தகர்த்தெறியும் நடவடிக்கை, அமலாக்கத் துறை, சிபிஐ, தேர்தல் ஆணையம், சட்ட ஆணையம், வருமானவரித் துறை, நீதித்துறையின் சுதந்திரத்தை பறிப்பது குறித்து குரல் எழுப்ப வேண்டும்.

ஆர்எஸ்எஸ் எண்ணம் உள்ளவர்களை ஆளுநர்களாக நியமித்து எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் நிர்வாகத்தை முடக்குவது, உச்ச நீதிமன்ற தீர்ப்பையே திருத்தும் வகையில் டெல்லியில் அவசரச் சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றுவது, பொது சிவில் சட்டத்தை கொண்டுவருவதை எதிர்த்து குரல் எழுப்புவோம்.

தமிழகத்துக்கான நிதி குறைப்பு, ரயில்வே திட்டங்களில் தமிழகம் புறக்கணிப்பு, நீட் தேர்வு, தமிழைப் புறக்கணிப்பது என 9 ஆண்டுகளில் நிதியோ, திட்டங்களோ பாஜக அரசு தரவில்லை. மத்திய அரசு வேலைவாய்ப்புகளிலும் தமிழக இளைஞர்களுக்கு இடமில்லை என்பதை இக்கூட்டம் பதிவு செய்ய விரும்புகிறது.

இந்தியா தாங்காது: எம்எல்ஏ, எம்.பி.க்களை விலைக்கு வாங்கி, கட்சித் தாவல் தடைச் சட்டத்தை காட்சிப் பொருளாக்கிய பாஜகவுக்கு இனி ஒருமுறை வாய்ப்பு கொடுத்தால் இந்தியா தாங்காது. எனவே, வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பாஜக அரசால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள வேதனைகளை, ஆளுநர்களின் அத்துமீறல்களை, மாநில உரிமைகளுக்கு ஏற்பட்டுள்ள பேராபத்தை விளக்கும் வகையில், திமுக எம்பிக்கள் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் உரக்க குரல் எழுப்பி, தமிழக மக்கள், இந்தியாவுக்காக செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x