Published : 15 Jul 2023 05:11 AM
Last Updated : 15 Jul 2023 05:11 AM

குழப்பம் ஏற்படுத்தி மாநிலத்தின் அமைதியை கெடுக்க ஆளுநர் நினைக்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

சென்னை: தமிழகம் வளர்வது, அமைதியாக இருப்பது ஆளுநருக்குப் பிடிக்கவில்லை. குழப்பம் ஏற்படுத்தி இந்த மாநிலத்தின் அமைதியைக் கெடுக்க நினைக்கிறார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆங்கில இதழ் ஒன்றுக்கு முதல்வர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

பாட்னா கூட்டம் - ஆலோசனை: கடந்த ஜூன் 23-ம் தேதி பாஜக-வுக்கு எதிரான எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பாட்னாவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றபோது, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கும், சில முக்கியமான ஆலோசனைகளைக் கூறினேன்.

அதாவது, எந்த மாநிலத்தில் எந்தக் கட்சி செல்வாக்குடன் இருக்கிறதோ அந்தக் கட்சி தலைமையில் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம். கூட்டணி அமைக்க முடியவில்லை என்றால் தொகுதிப் பங்கீடு செய்து கொள்ளலாம். அதுவும் முடியவில்லை என்றால் பொதுவேட்பாளரை அறிவித்துக் கொள்ளலாம்.

தேர்தலுக்குப்பின் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்பது சரியான நிலைப்பாடாக இருக்க முடியாது. அரசியல் கட்சிகளுக்கு இடையே குறைந்தபட்ச செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும். இதுபோன்று எழும் பிரச்சினைகளை சரிசெய்ய ஒருங்கிணைந்த நடவடிக்கைக் குழு அமைக்கப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளேன்.

மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளும், காங்கிரஸும் ஆதரவாக இல்லாத நிலையில் இந்த முயற்சிகளில் மம்தா பானர்ஜி பங்காற்றுவாரா? என்று கேட்டால், மம்தா பானர்ஜி இந்த அணி சேர்க்கையில் மிக முக்கியமான அணித் தலைவராக இணைந்துள்ளார். முரண்பாடுகள் என்பது மேற்கு வங்கத்தைப் பொறுத்தவை மட்டுமே. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை இந்தியாவை நினைத்தே மம்தா முடிவெடுத்து பாட்னா கூட்டத்தில் பங்கேற்றார்.

தமிழக ஆளுநர் செயல்பாடு: ஆளுநராக ஆர்.என்.ரவி வந்தது முதல் தமிழகத்தில் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்துவதையே தனது வேலையாக வைத்திருக்கிறார். அவருக்குப் பலமுறை இதனை உணர்த்தியாகிவிட்டது. ஆனாலும் அவர் தன்னை மாற்றிக் கொள்வதாகத் தெரியவில்லை.

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ரவி விடுத்த அறிக்கை, அரசியலமைப்பு நெறிமுறைகளை மீறுவதாகும். இது நிர்வாக ஒழுங்கு மீறலாகும். ஒரு அமைச்சரை நியமிப்பதும், நீக்குவதும் முதல்வரின் தனிப்பட்ட விருப்புரிமை சார்ந்ததே தவிர, வேறு யாருக்கும் அதிகாரமில்லை.

ஒரு அமைச்சருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதால், அவரை தானே நீக்கி விடலாம் என்ற அதிகாரம், நியமனப் பதவியில் உட்கார வைக்கப்பட்டிருக்கும் ஆளுநருக்கு இல்லை. அதனை அவர் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அவருக்கான வேலைகளை மட்டும் அவர் பார்க்க வேண்டும்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு கையெழுத்து போடாமல் வைத்துள்ளார். அவற்றை விரைந்து அனுப்ப வேண்டும். அதை விட்டுவிட்டு தனக்கு உரிமையில்லாத செய்கைகளில் ஆளுநர் மூக்கை நுழைத்து மூக்கறுபட்டுக் கொண்டிருக்கிறார்.

தமிழகம் வளர்வது, அமைதியாக இருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. ஏதாவது குழப்பம் ஏற்படுத்தி, இந்த மாநிலத்தின் அமைதியைக் கெடுக்க நினைக்கிறார். அவரிடம் நல்லெண்ணம் இல்லை.

தொழில் முன்னேற்றம்: தமிழகத்தை மேலும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல தமிழக அரசு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை மிகப் பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றும் விதமாக 2030-31-ம் நிதியாண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றுவதை லட்சிய இலக்காக நிர்ணயித்து, அந்தப் பாதையில் பயணித்து வருகிறோம். இந்த இலக்கை அடைய, ரூ.23 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்தாக வேண்டும். 46 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் வேண்டும். இதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்த 2 ஆண்டுகளில் முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் முன்னேறி வந்துள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x