Published : 15 Jul 2023 04:59 AM
Last Updated : 15 Jul 2023 04:59 AM
சென்னை: விரைவில் வெளியாக உள்ள திமுக ஃபைல்ஸ் இரண்டாம் பாகத்தில், புதிய அமைச்சர்கள் குறித்த விவரங்கள்தான் அதிகம் உள்ளன என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரான அண்ணாமலை, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த ஏப். 14-ல் ‘திமுக ஃபைல்ஸ்’ முதல் பாகம் வெளியானது. அது பலருக்கும் கோபத்தை உண்டாக்கியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் ரூ.1,000 கோடி வரை நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
பாஜகவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. டி.ஆர்.பாலு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சத்தியப் பிரமாணத்தில் பல பொய்களைக் கூறியுள்ளார். மூன்று நிறுவனங்களில் மட்டுமே தனக்கு பங்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
டி.ஆர்.பாலு 2004-2009-ல் ஊழல்களில் ஈடுபட்டதால்தான், 2009 மத்திய அமைச்சரவையில் அவருக்கு இடமில்லாமல் போனது குறித்து நான் தெரிவித்தைக்கூட, அவர் அவதூறு வழக்கில் சேர்த்துள்ளார். டி.ஆர்.பாலு எவ்வளவு ஊழலில் ஈடுபட்டுள்ளார், எத்தனை கப்பல்கள் வைத்துள்ளார், சேது சமுத்திர திட்டம் மூலமாக எவ்வளவு சம்பாதித்துள்ளார் என்பது குறித்து, 2014-ம் ஆண்டிலேயே அழகிரி குற்றம் சுமத்தியுள்ளார். ஆனால், இதுவரை அழகிரி மீது எந்த அவதூறு வழக்கையும் டி.ஆர்.பாலு தொடரவில்லை.
டி.ஆர்.பாலு, அவரது மகன், மருமகள் உள்ளிட்டோருக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு சொத்து உள்ளது. இது எங்கிருந்து வந்தது என்று நாங்கள் கேள்வி எழுப்பியுள்ளோம். ஆனால், அவரது சத்தியப் பிரமாணத்தில் இதையெல்லாம் மறைத்துவிட்டார்.
தமிழகத்தில் தற்போது முதல் தலைமுறைக்கும், மூன்றாவது தலைமுறைக்கும் யுத்தம் நடைபெறுகிறது. நாட்டுக்கு நல்லதுசெய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் முதல் தலைமுறையினர் உள்ளனர். திமுகவின் மொத்த குடும்பமும் மூன்றாவது தலைமுறை. தமிழகத்தை மாற்ற வேண்டும், ஊழலை எதிர்க்க வேண்டும் என்று கருதும் முதல் தலைமுறையினர் எங்களுடன் இணைய வேண்டும்.
ஊழலுக்கு எதிரானப் இந்தப் போராட்டம், சில நாட்களில் முடியப்போவதில்லை. நானும் தயாராகத்தான் வந்துள்ளேன். எந்த குடும்பத்தையும் அரசியல் மன்றத்துக்குள் இழுக்க வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல. அதனால்தான் அவர்களது புகைப்படங்களை திமுக ஃபைல்ஸ்-ல்வைக்கவில்லை. ஆனால், சத்தியப் பிரமாணத்தில் பொய் கூறியுள்ளதால், டி.ஆர்.பாலுவின் குடும்பத்தினரை நீதிமன்றத்தில் முறையிட்டு, அழைக்க உள்ளோம். அவருடைய மொத்த குடும்பமும் கூண்டில் ஏற வேண்டும். எங்களது கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும். அவர்களின் கேள்விகளுக்கு நாங்கள் பதில் கூறுவோம்.
நாங்கள் எந்த அமைச்சரையும்போல, நள்ளிரவில் நெஞ்சுவலி வந்து மருத்துவமனைக்கு செல்லக்கூடியவர்கள் கிடையாது. எல்லா கேள்விகளுக்கும் எங்களிடம் பதில் இருக்கும்.
திமுக ஃபைல்ஸ் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. அதில், புதிய அமைச்சர்கள் குறித்த விவரங்கள்தான் அதிகம் உள்ளன. குறிப்பாக, அதிமுகவில் இருந்து திமுக-வுக்கு சென்றவர்களின் பெயர்களும், 300-க்கும் மேற்பட்ட பினாமிகளின் விவரங்களும் அதில் உள்ளன. அதை பொது வெளியில் வெளியிடுவதா அல்லது ஆளுநரிடம் அளிப்பதா என்பது குறித்து யோசித்து வருகிறோம்.
திமுக ஃபைல்ஸ் இரண்டாம் பாகத்தை எனது பாத யாத்திரைக்கு முன்பாக வெளியிட வேண்டும் என்பதே எங்களது நோக்கம். பாதயாத்திரையில் நடக்க, நடக்க, திமுக ஃபைல்ஸ் 3, 4-வது பாகங்கள் வெளியாகும். முதல்வர் ஸ்டாலின் மீதும் சிபிஐ-யில் புகார் கொடுத்துள்ளோம்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT