Published : 15 Jul 2023 06:12 AM
Last Updated : 15 Jul 2023 06:12 AM

கோவளம் கடற்கரையில் அலையாத்தி காடுகளை உருவாக்கும் திட்டம்: மரக்கன்றுகள் நடும் பணியை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்

கேளம்பாக்கம்: கோவளம் கடற்கரை கழிமுகப் பகுதி உவர் நிலங்களில், சுற்றுச்சூழலைக் காக்கும் அலையாத்தி காடுகளை உருவாக்கும் வகையில் மிஷ்டி இயக்கம் மூலம் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், அலையாத்தி மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, கடற்கரை கழிமுகப் பகுதி உவர் நிலங்களில் சுற்றுச்சூழலைக் காக்கும் அலையாத்தி காடுகளை உருவாக்கும் வகையில், மிஷ்டி இயக்கம் மூலம் அலையாத்தி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் அலையாத்தி மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

மேலும், இத்திட்டத்தின் மூலம் கடற்கரை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேம்பட்டு, புயல் சீற்றம் தடைபடும். மிஷ்டி இயக்கத்தின் மூலம் தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ள கடற்கரை கழிமுகப் பகுதிகளான, உவர் நிலங்களில் உள்ள அலையாத்தி காடுகளை பாதுகாப்பதிலும், புதிதாக அலையாத்தி மரக்கன்றுகளை வளர்ப்பதில் சமூக ஆர்வலர்களுடன் மேற்கொண்டு வரும் பணிகள் பாராட்டுக்குரியது. அலையாத்தி காடுகள் வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு வனத்துறை, சமூக ஆர்வலர்கள், கடற்கரை பகுதி கிராம மக்கள், மாணவர்களுக்கும் மத்திய அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

பின்னர், தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு பேசும்போது, “தமிழ்நாட்டின் கடற்கரை உவர்நிலங்களில் அலையாத்தி காடுகள் உருவாக்கம், மிஷ்டி இயக்கம் மற்றும் ஈரநில இயக்கம் திட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக அளவு பரப்பளவில் அலையாத்தி காடு மரக்கன்றுகள் நடப்படுவதன் மூலம், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். கார்பன் சமநிலை ஏற்படுத்தப்படும். இது தொடர்பான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது” என்றார்.

இந்நிகழ்ச்சியில், மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை சிறப்புச் செயலாளர் சந்திர பிரகாஷ் கோயல், உலக சுகாதார நிறுவன ஆலோசகராக செயல்பட்ட சவுமியா சுவாமிநாதன், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சுப்ரத் மஹாபத்ர, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் ஸ்ரீனிவாஸ் ரா.ரெட்டி, சென்னை மண்டல தலைமை வனப் பாதுகாவலர் கீதாஞ்சலி, மாவட்ட வன அலுவலர் ரவிமீனா, சென்னை வன உயிரின காப்பாளர் ஈ.பிரசாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x