Published : 15 Jul 2023 06:08 AM
Last Updated : 15 Jul 2023 06:08 AM

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை காக்க மூத்த வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை

சென்னை: பாமக தலைவர் அன்புமணிநேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து, சூதாட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் தீவிரமடைந்திருக்கிறது.

இந்த வழக்கின் விசாரணையில், சூதாட்ட நிறுவனங்கள் சார்பில் இந்தியாவின் புகழ் பெற்றவழக்கறிஞர்கள் அணிவகுத்து நிற்கும் நிலையில், தமிழக அரசும்அதை திறம்பட எதிர்கொள்ளத் தயாராக வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டம் விளையாட்டு அல்ல, அதிர்ஷ்டம் என்பதை நிரூபிக்க வேண்டும். ஒருவர் ஆன்லைனில் சூதாடும்போது, அவருக்கு எதிராக மறுமுனையில் ஆடுவது யார் என்பதை ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் இதுவரை தெரிவிக்கவில்லை. செயற்கை நுண்ணறிவுத் திறன் தொழில்நுட்பத்தில் இயங்கும் ரோபோக்கள்தான் மறுமுனையில் விளையாடுகின்றன.

இது, நிச்சயமாக திறமையின்அடிப்படையிலானதாக இருக்க முடியாது. இந்த உண்மையை நீதிபதிகள் உணரும் வகையில் வலியுறுத்தி, ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லும் என்றதீர்ப்பை பெற வேண்டும். அதற்குசிறந்த சட்ட வல்லுநர் தேவை.

2014-ம் ஆண்டின் இறுதியில் தொடங்கி, 2020-ம் ஆண்டு நவம்பர் வரை 60-க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, தற்கொலை செய்து கொண்டனர்.

ஆனால், ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டிருந்த 10 மாதங்களில், தமிழகத்தில் ஒருவர் கூட தற்கொலை செய்துகொள்ளவில்லை. அதே நேரத்தில், ஆன்லைன் சூதாட்டத் தடைசட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு49 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த புள்ளி விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவித்து, ஆன்லைன் சூதாட்ட தடை சரிதான் என்பதை தமிழக அரசு நிரூபிக்க வேண்டும்.

ஆன்லைன் சூதாட்ட தடைசட்டத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகள் மீண்டும் வரும்19-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பாக, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் சிலரை தமிழக அரசின் சார்பில் வாதிடுவதற்காக நியமிக்க வேண்டும். தமிழகம் மீண்டும் ஆன்லைன் சூதாட்டநிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறாமல் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x